ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க 15 கி.மீ. அலையும் மக்கள்
லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்த மக்கள் ஏ.டி.எம்., வசதி இல்லாமல் பணம் எடுக்க 15 கி.மீ., பயணித்து கம்பம் வர வேண்டி உள்ளது.
கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி லோயர்கேம்ப். இது கூடலுாரில் இருந்து குமுளி செல்லும் ரோட்டில் ஏழு கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பெரியாறு மின்நிலையம் உள்ளது. இங்கு மின்வாரிய அலுவலர் குடியிருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல்பென்னிகுவில் மணிமண்டபம் உள்ளது. தவிர பொதுமக்கள் குடியிருப்பும் உள்ளது. தவிர எல்லைப்புற சோதனைச்சாவடிகள் அனைத்தும் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகளும், அரசு ஊழியர்களும் அதிகளவில் வசிக்கின்றனர்.
இங்கு ஏ.டி.எம்., வசதி இல்லை. இவர்கள் பணம் எடுக்க ஏழு கி.மீ., துாரம் பயணித்து கூடலுார் நகராட்சிக்கு வர வேண்டும். கூடலுாரிலும் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் ஏ.டி.எம்.,கள் உள்ளன. இவற்றில் பல நேரம் பணமும் இருப்பதில்லை. அப்படி பணம் இல்லாவிட்டால், மேலும் எட்டு கி.மீ., துாரம் பயணித்து கம்பம் வர வேண்டும்.
கம்பத்தில் போதிய அளவு வசதிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க 15 கி.மீ., பயணிப்பது மிக சிரமம். தவிர லோயர் கேம்ப் வரும் சுற்றுலா பயணிகள் ஏ.டி.எம்., இல்லாமல் பல நேரங்களில் பரிதவிப்பில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த சிக்கலை தீர்க்க லோயர்கேம்ப்பில் ஏ.டி.எம்., வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தி உள்ளனர்.