ராஜேந்திர சோழனிடம் கணக்கு சொன்ன பிள்ளையார்

அரண்மனைக்கு முன் கனக விநாயகர் கோயிலை அமைத்து, வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோயில் அமைக்கும் பணியை தன் அமைச்சரிடம் ஒப்படைத்தார்;

Update: 2023-09-23 09:00 GMT

ராஜேந்திர சோழனிடம் கணக்கு சொன்ன, கணக்கு பிள்ளையார்.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த பின், தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டிய மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் கோயில்போல தானும் கட்டவேண்டுமென தீர்மானித்து அதற்கான திருப்பணிகளைத் தொடங்கினார்.

அப்போது அனுதினமும் வழிபட அரண்மனைக்கு முன் இந்த கனக விநாயகர் கோயிலை அமைத்து, கோயிலுக்கு வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோவில் அமைக்கும் பணியை தன் அமைச்சரிடம் ஒப்படைத்தார்.

திருப்பணிகளுக்குத் தேவையான பொன்- பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன்வைத்து வணங்கிய பின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

ஒரு நாள் ஆலயத் திருப்பணிகளைப் பார்வையிட மன்னர் வந்தார். ஆலயம் கம்பீரமாக எழும்பிக்கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் அமைச்சரிடம், ”திருப்பணிக்கான செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கட்டளை இட்டுவிட்டுச் சென்றார் மன்னர்.

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. திருப்பணி செய்யும் மும்முரத்தில் அவர் கணக்கு ஏதும் எழுதவில்லை. அமைச்சருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெய்வம் தான் தம்மைக் காக்க வேண்டுமென்று கனக விநாயகர் சந்நிதிக்கு ஓடோடி வந்தார். ”பெருமானே, மன்னர் திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள் தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்” என கண்ணீர் மல்கி மனமுருகப் பிரார்த்தனை செய்துவிட்டு இல்லம் சென்றார்.

அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய கனக விநாயகர், ”அமைச்சரே, வருந்தாதீர். இதுவரை எத்து நூல் என்பது லட்சம் பொன் செலவானது என மன்னரிடம் கூறுங்கள்” என அருளி மறைந்தார். கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சந்நிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். 'விநாயகா!' என்று ஆனந்தக் கூத்தாடினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் “எத்து நூல் என்பது லட்சம் பொன்" என்று எழுதி வைத்துவிட்டார்.

மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பர். இதைக்கொண்டே கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் கல், மரம், மணல் எவ்வளவு வாங்கப்பட்டது என கணக்கிட்டு விடலாம். எத்து நூல் தான் முக்கிய இடம் வகிக்கிறது.

விடிந்ததும் ஓலைச் சுவடியுடன் மன்னரை சந்தித்த அமைச்சர், ''கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்ப, இதுவரை எத்து நூல் என்பது லட்சம் பொன் செலவாகியுள்ளது மன்னா!'' என்றார். இதைக் கேட்ட ராஜேந்திரசோழன், ''ஓ! கோயில் கட்டுமானத்தை (கோணல்களை) சரிபார்க்க வாங்கிய எத்து நூலுக்கே என்பது லட்சம் பொன் செலவாகி யிருக்கிறது என்றால், நாம் நினைத்தபடியே கோயில், மிகச் சிறந்த முறையில் உருவாகி வருகிறது!'' என்றெண்ணி உளமகிழ்ந்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், ''ஆமாம் அமைச்சரே! எத்து நூல், என்பது லட்சம் பொன் என்று மிகத் துல்லியமாக எப்படிக் கணக்கிட்டீர்கள்?'' என்று கேட்டார்.

ஒரு நிமிடம் மௌனமாக நின்ற அமைச்சர், 'மன்னரிடம் உண்மையை சொல்வதே நல்லது!' என்று தீர்மானித்தார். ஆரம்பம் முதற்கொண்டு கணக்கு- வழக்கு எதையும் எழுதி வைக்காத தனது செயல்பாட்டையும், கனக விநாயகர் கனவில் தோன்றி அருளியதையும் மன்னரிடம் விவரித்தார்.

இதைக் கேட்ட மன்னருக்கு ஆச்சரியம்! பரிவாரங்கள் சூழ, கனக விநாயகரின் சந்நிதிக்குச் சென்றவர் கண்ணீர் மல்க அவரை வணங்கி நின்றார். பிறகு அமைச்சரிடம், ''விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கெனில், அது சரியாகத்தான் இருக்கும். பிரகதீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பும் நமக்கு விநாயகரின் ஆசி கிடைத்து விட்டது. ஆம், நமது கனக பிள்ளையார் கணக்குப் பிள்ளையாராக அருள் பாலித்திருக்கிறார்!'' என்று பெருமிதம் பொங்கக் கூறியவர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபட்டார். அன்று முதல் கனக விநாயகர், கணக்கு விநாயகர் ஆனார்!  அதுமட்டுமா? ராஜேந்திர சோழன் வேறொரு காரியமும் செய்தார்!

'பிற்காலத்தில், நான்கு அடி உயரம் மற்றும் மூன்றடி அகலம் கொண்ட இந்த விநாயகரை வேறு இடத்துக்கு எவரேனும் மாற்றி விடக் கூடாது!' என்பதற்காக மிகச் சிறிய நுழைவாயில் கொண்ட கருவறையுடன் தனிக் கோயில் கட்டினாராம். கால ஓட்டத்தில், அந்நியர்களின் ஆதிக்கம் வந்த போது கூட, கணக்கு விநாயகர் கோயிலுக்கும் பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கைகொண்ட சோழபுரம்- பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை, உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது 'யுனெஸ்கோ' அமைப்பு. இத்தனை சிறப்புக்கும் அந்தக் கணக்கு விநாயகரே காரணமாகத் திகழ்ந்தார் என்றால் அவரது கீர்த்தியின் மகிமையை என்னவென்று சொல்வது?!

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கனக விநாயகர் அமைந்துள்ளார். இந்த விநாயகருக்கு பால், எண்ணெய் அபிஷேகம் செய்யும் போது இவர் பச்சைநிற மேனியராகக் காட்சி தருவார்.

Tags:    

Similar News