மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காத்திருக்கும் சவால்கள்

காங்கிரஸ் தலைவராக தேர்வாகி உள்ள மல்லிகார்ஜுன கார்கே தனக்கு முன்பாக உருவாகி இருக்கும் சவால்களை எளிதில் கடந்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-10-23 05:55 GMT

மல்லிகார்ஜுன கார்கே.

கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் உள்ள வரவட்டி என்ற கிராமத்தில் பட்டியல் வகுப்பு குடும்பத்தில் பிறந்து, பட்டப் படிப்பும், சட்டப் படிப்பும் படித்து, 1969-ல் தனது 27-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன கார்கே. மிக மிக எளிய பின்னணியைக் கொண்டவர். பட்டியல் வகுப்பினருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கையாலும், செயல்பாட்டாலும் படிப்படியாக கட்சியில் முன்னேறியவர் அவர். அவர் கட்சியில் சேர்ந்தபோது குல்பர்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போது, ஒருநாள் கட்சியின் அகில இந்திய தலைவராக ஆவோம் என்று அவர் நினைத்துப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே? ஆனாலும், அது தற்போது நிகழ்ந்துவிட்டது.

பல்வேறு பொறுப்புகள்

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்று, ஜனநாயகபூர்வமாக கட்சியின் தலைவராக ஆகி இருக்கிறார் கார்கே. தேசிய அரசியலுக்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அவர். 1972 முதல் தொடர்ச்சியாக 9 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அமைச்சராக இருந்தவர். ஒருமுறை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், இருமுறை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். நாடாளுமன்றத் தேர்தலில் இருமுறை வெற்றி பெற்றவர்.

அரசியலில் முதல் தோல்வியை 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் அவர் எதிர்கொண்டார். அப்போது அவருக்கு வயது 77. எனினும் கட்சி அவரை கைவிடவில்லை. 2020ம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் கார்கே. 2014-ல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கார்கே, 2020-ல் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நேரு குடும்பம் மீது விசுவாசம்

மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரசியல் வாழ்வை தொடங்கி, 2005-ல் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து, தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வாகி இருப்பவர் மல்லிகார்ஜுன கார்கே. காங்கிரசில் இணைந்ததில் இருந்து கட்சி, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுத்து, வளர அனுமதித்தது. தொடர்ச்சியான இந்த வளர்ச்சிக்குப் பின்னால், பட்டியல் வகுப்பினருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற காங்கிரசின் கொள்கை, கார்கேவின் கல்வி அறிவு, பொது அறிவு, அனுபவ அறிவு என எல்லாம் இருந்தாலும், அதற்கும் மேலாகவும் ஒன்று இருந்தது. அதுதான், நேரு குடும்பத்தின் மீதான அவரது விசுவாசம்.

1978-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி பொறுப்பேற்றதில் இருந்து அக்கட்சி, நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது. ராஜீவ் காந்தியின் அகால மரணத்தை அடுத்து, நரசிம்மராவும், சீதாராம் கேசரியும் தலைவர்களாக இருந்த அந்த 6 ஆண்டுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 44 ஆண்டுகள் அக்கட்சியின் தலைவர்களாக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தான் இருந்து வந்துள்ளனர். இதனால், கட்சியின் தலைமைக் குடும்பமாக நேரு குடும்பத்தைப் பார்க்கும் கலாசாரம் அக்கட்சியில் வேரூன்றிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் மிகச்சிறந்த விசுவாசிகளில் ஒருவர் மல்லிகார்ஜுன கார்கே. இது அவருக்கு இருக்கும் மிகப் பெரிய பலம்.

அணுகுமுறையில் மாற்றம்

மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து சசி தரூர் போட்டியிட்டாலும் காந்தி - நேரு குடும்பத்தின் ஆதரவு கார்கேவுக்கு இருந்தது என்பதால், அவரது வெற்றி, வாக்குப் பதிவுக்கு முன்பே உறுதியாகிவிட்டது. மிகச்சிறந்த விசுவாசியாக தன்னை தகவமைத்துக்கொள்ளாமல், நேரு குடும்ப தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜி-23 தலைவர்களில் ஒருவராக சசி தரூர் இருந்தது தான் அவரது படுதோல்விக்குக் காரணம்.

காந்தி - நேரு குடும்பத்திற்கான விசுவாசத்தில் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளும் வரை, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும். இத்தனை ஆண்டுகாலமாக ஆகச்சிறந்த விசுவாசிகளில் ஒருவராக இருக்கும் கார்கே, தனது 80-ஆவது வயதில் இருக்கும் கார்கே, இனிமேல் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்க முடியாது.

 கட்சி வலுப்படும்

அதேநேரத்தில், கட்சித் தலைவராக ஆளுமையை செலுத்த வேண்டிய கட்டாயம் கார்கேவுக்கு இருக்கிறது. மாற்றத்தை, சீர்திருத்தத்தை வேண்டி காத்து நிற்கும் கட்சி அது. கடந்த பல ஆண்டுகளாக அது நிகழாததால்தான் ஜி-23 தலைவர்கள் வெளிப்பட்டார்கள். மாற்றத்திற்கான, சீர்திருத்தத்திற்கான குரலை ஓங்கி ஒலிப்பதற்காகத்தான் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தான் போட்டியிட்டதாக சசி தரூர் கூறியதை யாரும் மறந்துவிட முடியாது. கட்சிக்கு என்ன தேவையோ அதை நேர்மையாகவும், துணிச்சலாகவும் செய்தால் தான் கட்சி வலுப்படும். அதற்கான சுதந்திரத்தை கார்கே எடுத்துக்கொள்வாரா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

ஒருபக்கம் நேரு குடும்பத்தின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்பட்டாக வேண்டும். அதேநேரத்தில், கட்சியையும் வலுப்படுத்தியாக வேண்டும். இது கம்பிமேல் நடக்கும் சாகசத்தைப் போன்றதுதான். இரண்டையும் வெற்றிகரமாக நிகழ்த்துவாரா கார்கே? பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News