19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம் திட்டம்..?

சுமார் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரபல ஐடி நிறுவனமான அக்சென்சர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Update: 2023-03-24 14:00 GMT

பைல் படம்

உலக பொருளாதார மந்தநிலை காரணமாக பெரும் நிறுவனங்கள் அத்தனையும் கடும் நெருக்கடியில் சிக்கி வருகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், உலக அளவிலான மந்தநிலை இந்தியாவையும் கடுமையாக பாதித்து வருகிறது.

காரணம் உலக அளவில் பெரும் கம்பெனிகள், நிறுனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். உலக பொருளாதார மந்தநிலையில் இந்த நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஐ.டி.,துறை பெருமளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதை சமாளிக்க ஆட்குறைப்பிலும் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் ஐ.டி., துறையில் அதிகளவில் இந்தியர்களே பணிபுரிகின்றனர். இவர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். இந்த பாதிப்பினை இந்தியா சந்தித்து வருகிறது.

உலக அளவில் பெரும் ஐ.டி., நிறுவனமான அக்சென்சர் நிறுவனம் பெரும் பாதிப்பில் சிக்கி உள்ளது. தன்னை இந்த பாதிப்பில் இருந்து மீட்டுக் கொள்ள பத்தொன்பதாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. வருடாந்திர வருவாய் சார்ந்த வளர்ச்சி மற்றும் லாப கணக்கையும் அந்நிறுவனம் குறைத்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவை இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த எண்ணிக்கை அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 2.5 சதவீதம் என தெரிகிறது. Non-Billable கார்ப்பரேட் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனம் தற்போது ஆண்டு வருவாய் வளர்ச்சி என்பது உள்நாட்டு கரன்சி மதிப்பில் 8 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. முன்பு இந்த வருவாய் 8 முதல் 11 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நடப்பு காலாண்டுக்கான வருவாய் 16.1 பில்லியன் டாலர்கள் மற்றும் 16.7 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக அக்சென்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சராசரியாக இந்த எண்ணிக்கை 16.64 பில்லியன் டாலர்களாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News