வைகை அணை நீர் மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள்
வைகை நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் சுற்றுக் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வளர்ந்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கினாலும் அணை நிரம்பியது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி;
தேனி மாவட்டத்தில் வைகை அணையினை சுற்றி அரைப்படித்தேவன்பட்டி, சரத்துப்பட்டி, சக்கரைப்பட்டி, தெற்குப்பட்டி, ஜல்லிப்பட்டி, சாவடிப்பட்டி, ஒக்கரைப்பட்டி, காமக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களின் மூலம் தான் வைகை அணையின் நீர் தேக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் குறையும் நேரத்தில் இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர்களை சாகுபடி செய்வார்கள். இதனை பொதுப்பணித்துறையும் ஏற்றுக் கொண்டது.
பயிர்கள் அறுவடை நேரத்தில் கூட அணை நீர் மட்டம் உயர்ந்து பயிர்கள் நீரில் மூழ்கினால் விவசாயிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படும். இதனைப்பற்றி இக்கிராமங்களின் விவசாயிகளும் கவலைப்படுவதில்லை. அணை நிரம்பினால் போதும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். மொத்தத்தில் அணை கட்டப்பட்டது முதல் தற்போது வரை நிலங்களில் நடக்கும் சாகுபடி வந்த வரை லாபம் என்ற நினைப்பு தான் இக்கிராமங்களின் விவசாயிகள் மத்தியில் காணப்படுகிறது.
தண்ணீர் குறைந்ததும் இந்த நிலங்களை உழவு செய்ய வேண்டியதில்லை. உரம் இட வேண்டியதில்லை. விதைத்தால் மட்டும் போதும். எனவே இழப்பு ஏற்பட்டால் விதைப்பு செலவு மட்டுமே பாதிக்கும்.
அணையில் நீர் மட்டம் உயராமல் அறுவடை செய்தால் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அடித்து விடும். அந்த அளவுக்கு வளம் நிறைந்தது வைகை அணையின் வண்டல் மண். இது காலம் காலமாக நடந்து வந்தாலும், வைகை அணை நிரம்பியதை விட வறண்டு கிடந்த வருடங்களே அதிகம் என்பதால் விவசாயிகளுக்கு சாகுபடி எப்படியும் கைக்கு வந்து சேர்ந்து விடும்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அணை நீர் மட்டம் உயர்ந்து விட்டது. தற்போதைய நிலவரப்படி நீர் மட்டம் 67 அடியை எட்டி விட்டது. இரண்டு மாதங்களாகவே வைகை நீர் மட்டம் சிறப்பான நிலையில் காணப்படுகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமளவு நீர் நிறைந்து விட்டது. இதில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் முழுக்க நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வரவு கிடைக்காமல் போய் விட்டது. எங்களுக்கு வருவாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை அணை நிறைந்தது மனதிற்கு நிறைவாக உள்ளது என விவசாயிகள் பெருந்தன்மையுடன் தெரிவித்தனர்.