பேபியை குளிப்பாட்ட கார்ப்பரேட் சம்பளம்: அனுபவ பெண்களுக்கு அடிக்குது லக்
தேனி மாவட்டத்தை சேர்ந்த பல பெண்கள் குழந்தைகளை குளிப்பாட்டுவதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர்.
தேனியை சுற்றிலும் உள்ள கிராமங்களிலும், தேனிக்குள் வசிக்கும் பெண்கள் சிலர், குழந்தைகளை குளிப்பாட்டுவதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர். கேட்கவே சுவராஸ்யமாக உள்ளது. இந்த தகவலை விரிவாக பார்ப்போம்.
தேனி மாவட்டத்தில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் மாதம் சராசரியாக 1200க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. இப்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் இளம் வயது பெண்களுக்கு இந்த குழந்தைகளை பராமரிக்க தெரிவதில்லை. இந்த பெண்களின் அம்மாக்களுக்குக் கூட குழந்தைகளை பராமரிக்கத் தெரியவில்லை என்பது வேடிக்கையாகவே உள்ளது.
எப்படியோ குழந்தைக்கு பால் மற்றும் உணவு கொடுத்து விடுகின்றனர். ஆனால், முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளை குளிப்பாட்டுவது மிகவும் சவாலான பணி. அதாவது குளிப்பாட்டும் போது குழந்தைகளின் மூக்குக்குள், வாய்க்குள், கண்ணுக்குள் தண்ணீர், சோப்பு நுரை எதுவும் போய் விடக்கூடாது. தவிர தினமும் குழந்தைகளை தலைக்கு குளிக்க வைக்க முடியாது. பல நேரங்களில் தலை நனையாமல் குளிப்பாட்ட வேண்டும்.
தலைக்கு குளிக்க வைக்கும் போது, குழந்தையின் தலையை உருட்டிக் கொடுக்க வேண்டும். இது மிகவும் அற்புதமான கலை. அதாவது பிறந்த குழந்தைகள் பலருக்கு தலை சீரான வட்டவடிவில் இருப்பதில்லை. குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் தலையை உருட்டிக்கொடுத்தால் வட்ட வடிவில் வந்து விடும். தவிர குளிப்பாட்டும் போது குழந்தையின் கை, கால்கள், நெஞ்சு, முதுகுப்பகுதிகளை நீவிக்கொடுக்க வேண்டும். (மெல்ல அழுத்தி வருடிக்கொடுத்தல்)
குழந்தை குளித்து முடித்த பின்னர் சாம்பிராணி புகை போட வேண்டும். அப்படி புகை போடும் போது குழந்தைக்கு மூச்சு திணறல் வந்து விடக்கூடாது. தீக்காயம் பட்டு விடக்கூடாது. இப்படி பல்வேறு நுட்பமான நடைமுறைகளை கடந்தே குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும்.
இவ்வளவு நுட்பமான வேலைகளை செய்ய நகர்பகுதியில் உள்ள சில வயதான அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் நன்கு தெரியும். இந்த கலையை பயன்படுத்தி அவர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
அதாவது ஒரு மாதம் குழந்தையை தினமும் வந்து குளிப்பாட்டி சாம்பிராணி புகை போட்டு, உடலை நீவிக் (வருடிக்கொடுத்தல்- இதை குழந்தைகளுக்கான ஒரு மசாஜ் என்றே சொல்லலாம்) கொடுத்து விட்டுச் செல்வார்கள். அதிகபட்சம் இந்த பணிகளை அரை மணி நேரத்தில் முடித்து விடுவார்கள்.
ஆனால், மாதம் அதாவது 30 நாள் குளிப்பாட்டித்தர மட்டும் ஒரு வீட்டிற்கு 5 ஆயிரம் சம்பளம் வாங்குகின்றனர். ஒரு பெண் குறைந்தபட்சம் 6 வீடுகளிலாவது வேலை செய்வார். (அதற்கு மேல் நேரம் போதாது). இப்படி குழந்தையை பராமரிக்க வரும் பெண்களுக்கு காபி, ஸ்நாக்ஸ்கள் கொடுத்து குழந்தையின் தாய்மார்கள் உபசரிப்பார்கள்.
காரணம், அவர்களின் குழந்தையை அல்லவா அவர்கள் பராமரிக்கின்றனர். இப்படி ஒரு குழந்தை பிறந்தது முதல் குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் வரை குளிப்பாட்டித் தருகின்றனர். அதன் பின்னர் குழந்தை விளையாட தொடங்கி விடும். குழந்தையை பெற்ற தாய்க்கும் சொல்லி கொடுத்து விடுவார்கள். அதற்குள் அடுத்த குழந்தை தயாராக இருக்கும். பிறப்பு விகிதம் அதிகம் என்பதாலும், இந்த வேலை நுட்பம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதாலும் இவர்களுக்கு அவ்வளவு மரியாதை கிடைக்கிறது. இப்படி மரியாதையும், அன்பும் மிகுந்த பணிகளை செய்வதோடு, மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கும் கிராமத்து பெண்களின் நுட்பத்தை வாழ்த்தியே ஆக வேண்டும்.
குழந்தை பராமரிப்பு பணிகளில் கிராமத்து பெண்களுக்கு யாரும் ஈடுகொடுத்துவிட முடியாது. அவர்கள் இயல்பாகவே ஒரு மருத்துவச்சியின் திறன் பெற்றவர்கள். குழந்தைகளுக்காகவே படிக்கும் டாக்டர்களுக்கு தெரியாத பல விஷயங்களை பிராக்டிகலாக தெரிந்தவர்கள்.