வைகை ஆற்றில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றம்

வைகை அணைக்கு வரும் நீர் முழுக்க அப்படியே வெளியேற்றப்படுகிறது

Update: 2021-07-26 14:45 GMT

வைகை அணை நிரம்பியதால்  ஆற்றின் கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் நீர் முழுக்க அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. அணையின் மொத்த நீர் மட்ட உயரம் எழுபத்தி ஓரு அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பினை கருதி அணையில் நீர் மட்டம் அறுபத்தி ஒன்பது அடியிலேயே பராமரிக்கப்படும். கடந்த வாரம் அணை நீர்மட்டம் 65 அடியை எட்டியதும் வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அணை நீர் மட்டம் 68.50 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இன்று இரவு 8.00 மணிக்கு அணை நீர் மட்டம் 69 அடியை எட்டியது. உடனே கலெக்டர் முரளிதரன் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையினை வெளியிட்டதோடு, அணைக்கு வரும் நீர் முழுவதையும் அப்படியே வெளியேற்றி நீர் மட்டத்தை  தொடர்ந்து 69 அடியாகவே பராமரிக்க உத்தரவிட்டார். இன்று இரவு நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. வரும் நீர் முழுக்க அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News