தேனியில் மரம் ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறை
தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறை தேனி மாவட்டத்தில் தேங்காய் பறிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 700 எக்டேர் (46 ஆயிரத்து 750 ஏக்கர்) பரப்பளவில் 32 லட்சம் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும், கூடலுார், கம்பம், உத்தமபாளையம் சுற்றுப்புறக் கிராமங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்கள் உள்ளன.
தென்னையில் இளநீர் இறக்குதல், தேங்காய் இறக்குதல், பழுதுபார்த்தல் போன்ற பல்வேறு வேலைகளை செய்ய வேண்டி உள்ளது. தவிர மயிலாடும்பாறை, வருஷநாடு பகுதிகளில் இரண்டரை லட்சம் தென்னை மரங்களில் ‛நீராபானம்’ இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே தென்னை தோப்புகளில் ஆண்டு முழுவதும் வேலை இருக்கும்.
இதனால் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பற்றாக்குறை காரணமாக பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோவை, திருப்பூர் மாவட்ட கிராமப்பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இவர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கேட்கின்றனர். இவ்வளவு சம்பளம் கொடுத்தால், தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகாது. இருப்பினும் வேறு வழியின்றி வெளிமாவட்ட தொழிலாளர்கள் மூலம் தேங்காய் இறக்கும் பணி, இளநீர், ‛நீராபானம்’ இறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மரம் ஏறி வேலை செய்ய வசதியாக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய வேளாண்மைத்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.