உலகின் நம்பர் ஒன் பல்லுயிர் சூழல் கொண்ட வனம், தேனி மேகமலை: நம்மூர் அதிசயம்! (EXCLUSIVE)
அனைத்து விலங்கினங்கள், பறவையினங்கள், வாழும் பல்லுயிர்சூழல் கொண்டது தேனி மேகமலை என வன ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்துள்ளனர்.;
meதமிழகத்தில் இயற்கை வளம் மிகுந்த மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. தேனி மாவட்டத்தின் ஒட்டு மொத்த பரப்பளவில் 33 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இதில் மேகமலை மட்டும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. போடியில் இருந்து குமுளி வரை செல்லும் வனப்பரப்பும் இதே சம பரப்பளவு கொண்டது. மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் வன நிலங்கள் உள்ளன.
இதில் மேகலையின் சிறப்புகளை மட்டும் இந்த கட்டுரையில் காணலாம். கண்ணகி வாழ்ந்த காலத்திற்கு பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வைகை வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வரை மேகமலையின் வளத்தை பற்றி ஆராய்ச்சியாளர்கள் எழுதிக்கொண்டே உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் உலக அளவில் அதிக பல்லுயிர் சூழல் நிலவுவது மேகமலையில் மட்டும் தான். ஆமாம். உலகில் பல அடர்ந்த வனங்கள், மலைகள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான விலங்கினங்கள், பறவையினங்கள், உயிரினங்கள் அதிகளவில் உயிர் வாழும். சில உயிரினங்கள் இருக்கவே இருக்காது. மேகமலையில் மட்டுமே உலகில் உள்ள அத்தனை வன உயிரினங்களும் வாழ்கின்றன.
மேகமலை தனித்த மலையில்லை.மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு தொடராகவே அமைந்துள்ளது. மேகமலையின் ஒருபுறம் களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயம், மறுபுறம் தேக்கடி புலிகள் சரணாலயம், ஒருபுறம் ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல்நிற அணிகள் சரணாலயம் என அடுத்தடுத்து பல ஆயிரம் சதுர கி.மீ., பரந்து விரிந்து செல்கிறது. ஒரு பகுப்பாய்வுக்காக மட்டுமே மேகமலை, பொதிகைமலை, சபரிமலை, கண்ணகி மலை என்ற பெயரில் சில மலைத்தொடர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அப்படி பிரிக்கப்பட்ட மேகமலை வனப்பகுதியில் எல்லைக்குள் அடங்கி உள்ள அதிசயங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். சரித்திரப்புகழ் வாய்ந்த கண்ணகி கோயில் மேகமலையின் வனப்பரப்பிற்குள் உள்ளது.
மேகமலையில் புலிகள், யானைகள், சிறுத்தைகள், செந்நாய்கள், அணில்கள் என பல்வேறு காட்டு விலங்குகள் வாழ்கின்றன. முட்புதர்காடுகள், இலையுதிர்காடுகள், வறண்ட காடுகள், பசுமைமாறாக்காடுகள், சோலைக்காடுகள், புல்வெளிக்காடுகள் என அனைத்து வகை காடுகளும் இங்கு உள்ளன. மேகமலையில் 1848 ம் ஆண்டு 'வுட் சினேக்' என்ற அரிய வகை பாம்பு கண்டறியப்பட்டது. இந்த பாம்பு இந்த மலையை தவிர உலகில் வேறு எங்குமே இல்லை. திரும்பவும் 140 ஆண்டுகள் கழித்து கர்னல் பிடோன் என்ற ஆங்கில வன ஆய்வாளர் 1988ம் ஆண்டு அதே அரிய வகை பாம்பு வாழ்வதை கண்டறிந்து உறுதி செய்தார்.
'இலியோகார்பஸ்வாஷினி' என அழைக்கப்படும் ஒருமுக ருத்திராட்ச மரங்கள் உலகில் மொத்தமே 18 மரங்கள் தான் உள்ளன. அந்த 18 மரங்களும் மேகமலையில் மட்டுமே உள்ளன. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய குறிஞ்சிப்பூக்கள் உலகெங்கும் உள்ளன. ஆனால் மேகமலையில் மட்டுமே 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய குறிஞ்சி மலர்கள் உள்ளன. 1948ம் ஆண்டு சலீம்அலி என்ற உலகப்புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளர் அரிய வகையினை சேர்ந்த பழம் தின்னும் வவ்வாள்களை மேகமலையில் கண்டறிந்தார். உலகில் மேகமலையில் மட்டும் காணப்படும் இந்த அரிய வகை பழம்தின்னும் வவ்வாள்களுக்கு ஆராய்ச்சியாளர் சலீம்அலி பெயரே சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகில் வேறு எந்த வனத்திலும் இல்லாத 'ஹெமிடேக்டைலஸ் வனம்' மற்றும் 'பிராவிடோ எக்கோ' என்ற இரண்டு பல்லி இனங்கள் மேகமலையில் மட்டுமே வாழ்கின்றன. இதனை உலக வன ஆய்வகமே உறுதிப்படுத்தி உள்ளது.
உலகில் ஐந்து வகையான குரங்கினங்கள் வாழும் ஒரே மலை மேகமலை மட்டுமே. அதாவது சாதாரணவகை குரங்கு, அனுமன்மந்தி, கருங்குரங்கு, சிங்கவால்குரங்கு, தேவாங்கு ஆகிய ஐந்து குரங்கு இனங்கள் இங்கு வாழ்கின்றன. மற்ற வனங்களில் இவற்றில் ஏதாவது ஒரிரு வகை குரங்கினங்கள் மட்டுமே வாழும். அதேபோல் சாம்பல் நிற அணில், மலபார் அணில், பறக்கும் அணில் ஆகிய மூன் று அணில் வகைகளும் இங்கு தான் வாழ்கின்றன. உலகம் முழுவதும் மூன்றாயிரம் சிங்கவால் குரங்கு இனங்கள் மட்டுமே உள்ளன. இதில் 10 சதவீதம் அதாவது 300 சிங்கவால் குரங்குகள் மேகமலையில் மட்டுமே உள்ளன. தமிழ்மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட வன உயிரினமான வரையாடுகள் உலகில் இரண்டாயிரத்து நுாறு மட்டுமே உள்ளன. இதில் மேகமலையில் மட்டுமே இருநுாற்றி ஐம்பது வரையாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்க விஷயம். தவிர மான் இனங்களில் எத்தனை வகை உள்ளதோ, அத்தனை வகையும் மேகமலையில் உள்ளது. கருநாகம், ராஜநாகம், மலைப்பாம்பு, நல்லபாம்பு, கண்ணாடிவிரியன், சுருட்டை பாம்பு, பச்சைநாகம், பச்சை விரியன் என கொடும் விஷம் கொண்ட பல நுாறு வகை பாம்புஇனங்கள் உள்ளன. மின்மினிப்பூச்சி முதல் பட்டாம்பூச்சி வரை மொத்தம் 360 வகையான பூச்சி இனங்கள் இங்கு வாழ்கின்றன. உலக பறவை ஆராய்ச்சியாளர்கள் கொண்டாடும், இருவாச்சி பறவைகள் முதல், அக்காகுருவி, கிளி, மைனா என 260க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வாழ்கின்றன.
இப்படி ஆச்சர்யப்பட பல விஷயங்கள் உள்ள நிலையில், இதில் வருத்தப்படும் சில விஷயங்களும் உள்ளன. இங்கு வாழ்ந்த கழுதைப்புலி, வெள்ளிமான் இனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. எனவே மேகமலையின் அதிசயங்களை பாதுகாக்க மலை வளத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். மேகமலையில் உயிரின சுழற்சி சரியாக இருந்தால் மட்டுமே சமூகத்தை பாதுகாக்க முடியும். வற்றாத வைகை நதியை மீண்டும் உருவாக்க முடியும். மேகமலையின் வளம் தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மட்டும் விவசாய பயன்பாட்டிற்கு நீர் ஆதாரமாக உள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.