பேருந்துகள் இல்லாததால் வேலைக்கு ஜீப்பில் செல்லும் தொழிலாளர்கள்
கேரளாவிற்கு வேலைக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் ஜீப்பில் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் ஜீப்பில் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவையான அளவு அரசு பேருந்துகளை இயக்கினாலே போதும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் குமுளியில் இருந்து போடி வரை கேரள தமிழக மாநில எல்லைகள் சந்திக்கின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்ல குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய மூன்று பாதைகள் உள்ளன. இதில் குமுளி வழியாக செல்ல மட்டுமே போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போடி மெட்டு, கம்பம் மெட்டு வழியாக செல்ல ஓரிரு பேருந்துகள் அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் எல்லையோரம் உள்ள தேயிலை, காபி, ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தேனி மாவட்ட தொழிலாளர்கள், வேறு வழியின்றி கேரள தோட்ட முதலாளிகள் ஏற்பாடு செய்யும் ஜீப்களில் பயணிக்கின்றனர். இந்த ஜீப்களில் அதிகபட்சம் 8 பேர் முதல் 10 பேர் வரை மட்டுமே செல்ல முடியும். ஆனால் ஒரு ஜீப்பில் சராசரியாக 25 தொழிலாளர்கள் நெருக்கி அமர்ந்து பயணிக்கின்றனர்.
இதனால் டிரைவரால் முறையாக ஜீப்களை இயக்க முடிவதில்லை. ஓவர்லோடு லோடு காரணமாக ஜீப்புகளும் கட்டுப்பாட்டை இழக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரை இழக்கின்றனர். கை, கால்களை இழக்கின்றனர். காவல்துறையினர் என்ன தான் கட்டுப்பாடுகளை போட்டாலும், சோதனைகளை நடத்தினாலும் முழுமையாக இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்களின் உயிரிழப்பினை பொருட்படுத்துவதும் இல்லை. தொழிலாளர்களின் குடும்பங்கள் தவிப்பதையும் கண்டுகொள்ளவில்லை. போக்குவரத்துக்கழகம் ஒரு சேவைத்துறை தான். ஆனால் தனியார் பேருந்துகளுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்காக குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட வழத்தடங்களில் பேருந்துகளை இயக்குவதில்லை. இதனை யாரும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் இல்லை. போடி மெட்டு, கம்பம் மெட்டு வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து பயணிக்கின்றனர். அரசு பேருந்துகளை இயக்கினால், இவர்கள் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. இதனை கருத்தில் கொண்டு, அரசு கம்பம் மெட்டு, போடி மெட்டு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.