தேனி எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா செய்த பெண்கள்
போலீஸ் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மூன்று பெண்கள் தேனி எஸ்.பி., அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர்.;
சின்னமனுார் அருகே முத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி, 24. இவரது கணவர் சேவுகராஜன் மனைவியை பிரிந்து செல்லும் போது குழந்தையையும் அழைத்துச் சென்று விட்டார். இந்த குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என மகாலட்சுமி சின்னமனுார் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மனம் உடைந்த மகாலட்சுமி, தனது தாய் பரிமளா தனது அக்கா பிரியதர்ஷினி ஆகியோருடன் தேனி எஸ்.பி., அலுவலகம் வந்தார். அப்போது எஸ்.பி., வேறு அவசர பணியில் இருப்பதாக கூறி சந்திக்க அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த மூன்று பெண்களும் எஸ்.பி., அலுவலகம் முன்பு உள்ள மதுரை ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர். இந்த மூன்று பேரையும் போலீசார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.