தேனி: டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது
தேவாரம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு, லாரி பறிமுதல்.;
தேனி மாவட்டம், தேவாரம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் தேவாரம் அருகே மறவபட்டி-தம்மிநாயக்கன்பட்டி பிரிவு அருகே ரோந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வந்த டிப்பர் லாரி ஒன்றை மறித்து சோதனை செய்தார். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. லாரியையும் ஓட்டுநரையும் பிடித்து தேவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து விசாரித்ததில் லாரியை ஓட்டி வந்தது போடியை சேர்ந்த மாறன் என்பது தெரிய வந்தது.
இது குறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தேவாரம் போலீசார் மாறனை கைது செய்து, டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.