அகண்ட தேனி ரோடுகள்....! ஆச்சர்யப்படுத்திய அதிகாரிகள்...!
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் தேனி ரோடுகளில் அகலம் அதிகபட்சமாக 200 அடியை எட்டியுள்ளது.
தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. அப்போது பெரியகுளம் சப்-கலெக்டர் அங்கே இருக்கிறார். சுதந்திரபோராட்ட காலத்தை சேர்ந்த ஒரு தியாகி, அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். வயதானவர். சப்-கலெக்டரிடம் போய், ‘நான் இந்த ராஜவாய்க்காலி்ல் எனது இரு கைகளால் அள்ளி தண்ணீரை குடித்திருக்கிறேன். குளித்து விளையாடி மகிழ்ந்திருக்கிறேன்.
அதன் பின்னர் காணாமல் போன இந்த வாய்க்காலை 60 ஆண்டுகள் கழித்து நீங்கள் கண்டுபிடித்து கொடுத்துள்ளீர்கள். இதற்காக இறைவன் உங்கள் வம்சம் செழித்து வாழ அருள்புரிவான்’ என ஆசிர்வதித்தார். இதனை கேட்ட சப்-கலெக்டர் ஆடிப்போய் விட்டார். காரணம் தேனியில் முடியவே முடியாது... நடக்கவே நடக்காது... என நினைத்த அத்தனை சம்பவங்களும் தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. அதில் ஒன்று ஆக்கிரமிப்பு அகற்றம். அதாவது பெரியகுளம் ரோட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிக்கு வரி கட்டி வந்த பல கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ரயில்வே லைனை ஒட்டி அமைந்திருந்த பல வீடுகள் அகற்றப்பட்டு விட்டன. அங்கு ரயில்வேக்கு சொந்தமான சரக்கு கையாளும் குடோன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பெரியகுளம் ரோட்டோரம் ரயில்வே கேட்டில் இருந்து பொம்மையகவுண்டன்பட்டி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது சிலர் மீண்டும் அங்கு தற்காலிக கடை அமைத்துள்ளனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றியது மிகப்பெரிய சாதனை. அகற்றப்பட்ட இடங்களில் சாலைகள் அமைக்கப்படும் போது ரோடுகள் கிடைத்து விடும்.
அடுத்தது மதுரை ரோடு. இங்கு ஆக்கிரமிப்பினை எடுக்க யாரும் பிறக்கவில்லை என்ற நிலையே காணப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆனாசயமாக அத்தனை ஆக்கிரமிப்புகளையும் துாக்கி விட்டனர். தேனியின் 60 ஆண்டு கால பிரச்னை ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு. 60 அடி அகலமும், இரண்டரை கி.மீ., நீளமும் கொண்டு இந்த வாய்க்காலை ‘‘என்னை தாண்டி தொட்டுப்பார்’’ என பல நுாறு பேர் வலுவான கான்கிரீட் கட்டிடங்களை கட்டி அமர்ந்திருந்தனர். நகராட்சியும் தனது பங்குக்கு தளம் போட்டு வாய்க்காலை மூடி 60 ஆண்டுகளாக பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போதைய ஆக்கிரமிப்பு அகற்றலில் அத்தனையும் தற்போது தவிடுபொடியாகி வி்ட்டது.
60 ஆண்டுகளாக காணாமல் போன ராஜவாய்க்கால் தற்போது ஓரளவு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு விட்டது. இதற்காக 200க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளி விட்டனர். கோயில்கள் கூட அகற்றப்பட்டு விட்டன. கடந்த சில நாட்களில் ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய நான்கு துறைகளும், சேர்ந்து நடத்திய ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் காரணமாக தேனியில் அகண்ட ரோடுகள் உருவாகி விட்டன. தற்போது இடையிடையே மின்கம்பங்கள் மட்டும் இடையூறாக உள்ளன. இதனையும் அகற்றி ரோட்டோரம் கொண்டு வந்து விட்டால், அகண்ட தேனி எப்போதும் குறுகாத ஒரு நிலை உருவாகி விடும்.