தேனி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு தேனி மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.;
தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் நாகராஜன், 61. இவர் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் 2011ம் ஆண்டு தாசில்தாராக பணிபுரிந்தார். ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த கொத்தாளமுத்து மகன் சரவணனுக்கு சொத்து மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து கொத்தாளமுத்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., இசக்கி ஆனந்தன், இன்ஸ்பெக்டர் முத்துராஜிடம் புகார் செய்தார்.
போலீஸ் அறிவுரைப்படி 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி ராசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயினை கொத்தாளமுத்து தாசில்தாரிடம் வழங்கினார். இதனை வாங்கும் போது தாசில்தார் நாகராஜன் கையும், களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடந்து முடிவதற்குள் நாகராஜன் ஓய்வு பெற்று விட்டார். நேற்று நீதிபதி கோபிநாதன், வழங்கிய தீர்ப்பில், 'ஓய்வு பெற்ற தாசில்தார் நாகராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.