வெளியூர்காரர்களும் ரசித்து, ருசித்து சாப்பிடும் தேனி புரோட்டாவின் மவுசு

வெளியூர்காரர்களும் ரசித்து, ருசித்து சாப்பிடும் தேனி புரோட்டாவின் மவுசு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Update: 2023-05-12 16:47 GMT

டாக்டர் சிவராமன் போன்ற பல உணவியல் நிபுணர்கள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் மக்களுக்கு புரோட்டா மீது உள்ள மோகம் இன்னும் குறையவில்லை. புரோட்டாவினை மட்டன், சிக்கன் குழம்புடன் கலந்து சாப்பிடுபவர்களுக்கு தான் அதன் அருமையான சுவை பற்றி தெரியும். தேனி மாவட்டத்தில் ஏராளமான புரோட்டா கடைகள் உள்ளன. அத்தனை கடைகளிலும் வியாபாரம் களை கட்டுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

தேனியில் சில ஓட்டல்களின் புரோட்டா மிகவும் பிரபலம். தேனி புரோட்டா சாப்பிட வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவிழாக்காலங்களிலும், விடுமுறை நேரங்களிலும் புரோட்டா சாப்பிட என ஒரு கூட்டம் வெளியில் இருந்து வரும். உள்ளூரில் இருப்பவர்களுக்கு தேவையான அளவு புரோட்டா தயாரிக்க முடியாத நிலையில், வெளியூரில் இருந்தும் வரும் புரோட்டா பிரியர்களை சரிகட்ட முடியாமல் சில ஓட்டல்கள் திணறி வருவது உண்மை தான்.

ஆமாம். வழக்கமான நாட்களில் மூன்று புரோட்டா மாஸ்டர்கள் வேலை செய்யும் ஒரு ஓட்டலில், விடுமுறை நாள், திருவிழா நாளில் எட்டு மாஸ்டர்கள் வரை புரோட்டா தயாரிப்பார்கள். அதற்கேற்ப மட்டன், சிக்கன் வகைகளின் தயாரிப்பும் அதிகமாக இருக்கும். சப்ளையர்களையும் அதிகப்படுத்த வேண்டும். அப்படியிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு புரோட்டா வழங்க முடியாமல் ஓட்டல்கள் திணறுகின்றன. சில கடைகளில் காலை முதலே புரோட்டா கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்கள் குவியும் கடைகளில் மதியம் 3 மணிக்கு தான் புரோட்டா விற்பனை தொடங்கும். இரவு 8 மணிக்குள் விற்றுத்தீர்ந்து விடுகிறது. அதிகபட்சம் இரவு 8.30 மணிக்கு மேல் இட்லி, தோசையை வைத்து ஓட்ட வேண்டி உள்ளது. ஓட்டலை மூட இரவு 11 மணியாகும். அதுவரை வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இவர்களுக்கு புரோட்டா இல்லை என்று சொன்னவுடன் ஏமாற்றத்தில் சோர்ந்து விடுகின்றனர். சிலர் தகராறு செய்கின்றனர்.

இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது: புரோட்டா மாஸ்டர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தினாலும், தற்போதய அக்னி நட்சத்திர வெக்கையில் அடுப்பங்கரையில் புரோட்டோ போடுவது மிகவும் சிரமமான விஷயம். இதனால் கஷ்டம் தெரியாமல் இருக்க, சில மாஸ்டர்கள் மது அருந்துகின்றனர். இதனை அனுமதிக்காமல் இருக்கவும் முடியாது. அனுமதிக்கவும் முடியாது. சில நேரங்களில் மாஸ்டர்கள் முதல் சுற்று புரோட்டோ போட்டு முடித்ததும், சரக்கு குடித்து விட்டு சாய்ந்து விடுகின்றனர். இதனால் புரோட்டா மாஸ்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பலன் இல்லாமல் போய் விடுகிறது. குறைந்த அளவு புரோட்டாவே தயாரிக்க முடிகிறது. சுவையிலும், தரத்திலும் காம்ப்ரமைஸ் செய்தால் ஓட்டலை இழுத்து மூட வேண்டியிருக்கும். எனவே என்ன தான் வெக்கை இருந்தாலும், அடுப்பு அனல் வீசினாலும் புரோட்டா மாஸ்டர்களை தாஜா செய்து, ஒவ்வொரு புரோட்டாவையும் தரமாகத்தான் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

எங்கள் கடைகளின் தரத்தையும், சுவையினையும் நம்பியே வாடிக்கையாளர்கள் வருகின்றனர். புரோட்டா இல்லை என்று கூட சொல்லி திரும்ப அனுப்பி விடலாம். மறுநாள் வந்து விடுவார்கள். ஆனால் அவசரம் கருதி தரமற்ற புரோட்டா தயாரித்து வழங்கினால் தகராறு செய்து விட்டு சென்று விடுவார்கள். கடைக்கே வரமாட்டார்கள். பின்னர் தொழில் நசிந்து விடும். எனவே தரத்தை காப்பாற்ற நாங்கள் உற்பத்தியின் அளவை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இந்த நிர்ப்பந்தம் காரணமாக தினசரி விற்பனை தேவையினை பூர்த்தி செய்ய முடியவில்லை. பற்றாக்குறையினை தவிர்க்க முடியவில்லை என்றனர்.

Tags:    

Similar News