வேலை வாங்கித்தருவதாக கூறி மெகா மோசடி செய்யும், டெல்லி கும்பல், தேனி போலீசிடம் சிக்கியது

தமிழகத்தில் 20 மாவட்டங்களை சேர்ந்த பல பேரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி, கோடி கணக்கில் மோசடி செய்த டெல்லி கும்பலை தேனி போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-27 13:39 GMT

டெல்லியில் சிக்கிய மோசடி கும்பலுடன் தேனி எஸ்.பி., மற்றும் தனிப்படை போலீசார்


தேனி மாவட்டம் ஜம்புலிபுத்துாரை சேர்ந்த மலைச்சாமி என்பவர் மனைவி சாரதா,  இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார்.

இவரது மொபைலுக்கு ''வேலை வேண்டுமா? இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்'' எனக்கூறி ஒரு மெசேஜ் வந்துள்ளது. சாரதா அந்த நம்பரில் தொடர்பு கொண்டார் மொபைலில் பேசிய நபர், பெயர், முகவரி, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார்.


அடுத்த இரண்டு நாளில் சாரதாவை தொடர்பு கொண்ட ஒரு நபர், தான் 'டெல்லி ஏர்போர்ட் அத்தாரிட்டி' பிரிவில் வேலை செய்வதாகவும், டெல்லி ஏர்போர்ட்டில் 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள். இதற்கு பதிவு கட்டணம் 2550 ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி ஒரு வங்கி கணக்கினை கொடுத்துள்ளனர்.

அந்த கணக்கில் சாரதா பணம் செலுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ஒரு போலியான offer letter அனுப்பி உள்ளனர்.

அடுத்தடுத்து சாரதாவை தொடர்பு கொண்ட நபர்கள் டிரெய்னிங் பீஸ், டெக்னிக்கல் கிட் பீஸ், சேலரி அக்கவுண்ட் ஓப்பன் பீஸ், டிரெய்னிங் அக்காம்ட்டேசன் பீஸ் என பல்வேறு காரணங்களை சொல்லி 15 லட்சத்து 74 ஆயிரத்து 425 ரூபாய் வாங்கி விட்டனர்.

அதன் பின்னர் சாரதாவிடம் தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொண்டனர். சந்தேகம் அடைந்த சாரதா தேனி இணையவழி குற்ற போலீஸ் பிரிவில் புகார் செய்தார்.

தேனி எஸ்.பி., டோங்கரே பிரவீண் உமேஷ் இந்த வழக்கினை விசாரிக்க, போடி இன்ஸ்பெக்டர் சரணவன், எஸ்.ஐ.,க்கள் சுல்தான் பாட்ஷா, திவான் மைதீன் ஆகியோர் தலைமையில் 11 பேர் கொண்ட தனிப்படை அமைத்தார்.

இவர்கள் டெல்லியில் சென்று ரகசிய விசாரணை நடத்தினர். முதலில் டெல்லி சபர்பூர் ஜெ.ஜெ., காலனியை சேர்ந்த கோவிந்த்,  என்பவரை கைது செய்தனர்.

இவர் கொடுத்த தகவல் அடிப்படையில், டெல்லி நேதாஜி சுபாஷ் பிளேசில் 9வது பிளாக்கில் இருந்த ஒரு அப்பார்ட்மெண்டிற்கு சென்று விஜய், ராம்சந்திரன், ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் டெல்லியில் ஒரு தனி அலுவலகம் கால் சென்ட்ர் போல் நடத்தி மோசடி செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


அந்த அலுவலகத்திற்கு சென்று 31 மொபைல் போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், 46 ஏ.டி.எம்., கார்டுகள், இன்டர்நெட் பயன்பாட்டுக்கு உரிய இதர கருவிகள், பல்வேறு நெட்வொர்க்குகளை சேர்ந்த பல சிம்கார்டுகள், வங்கி செக் புத்தகம், போலி ஆவணங்கள் உட்பட ஏராளமான பொருட்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தேனி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தேனி எஸ்.பி., டோங்கரே பிரவீண் உமேஷ் கூறியதாவது: கைதான கும்பலின் பூர்வீகம் நாமக்கல், சேலம் மாவட்டம் ஆகும்.

இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னரே டெல்லியில் சென்று குடியேறி விட்டனர். ஆனால் தமிழ் மிகவும் அழகாக பேசத்தெரியும். இவர்கள் நாடு முழுவதும் இது போன்று ஏமாற்று வேலைகள் செய்துள்ளனர்.

டெல்லி தமிழகத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ளது என்பதால், பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் இவ்வளவு துாரம் பயணித்து வந்து பணம் கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் தமிழகத்தை குறி வைத்து ஏமாற்று வேலை செய்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 20 மாவட்டங்களை சேர்ந்த பல நுாறு பேரை ஏமாற்றி உள்ளனர். ஒவ்வொருவரிடமும், எவ்வளவு முடியுமோ அந்த அளவு பணம் பறித்துள்ளனர். யார்? யாரிடம் எவ்வளவு வாங்கியுள்ளனர் என்ற விவரத்தை அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நோட் போட்டு எழுதி வைத்துள்ளனர்.

இதனை கூட்டி பார்த்தால் மோசடி தொகை பல கோடி ரூபாய்களை தாண்டும். தமிழகத்தில் இக்கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம். இக்கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

மோசடி செய்தது எப்படி: இக்கும்பல் ஒரே நேரத்தில் பல்வேறு மொபைல் எண்களுக்கு மொத்தமாக மெசேஜ் அனுப்புவார்கள். வேலை வேண்டுமா குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு மொபைல் எண்ணை கொடுத்துள்ளனர்.

இப்படி தொடர்பு கொண்டவர்களை இவர்கள் தொடர்ச்சியாக மொபைலில் பேசி சாதுர்யமாக பணம் வசூலித்துள்ளனர். இப்படி சம்பாதித்த பணத்தில் டெல்லியில் நேதாஜி சுபாஷ் பிளேஷ் 9வது பிளாக்கில் தனித்தனி சொகுசு பங்களாக்கள் வாங்கியுள்ளனர்.

விஜய் தனது திருமணம் முடிந்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு விமானம் மூலம் கேரளா வந்து ஹனிமூன் கொண்டாடி உள்ளார்.

மூணாறில் பல நாட்கள் தங்கி உள்ளார். ராம்சந்திரனும் இதேபோல் பல இடங்களில் விமானம் மூலம் சுற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இவர்கள் பயன்படுத்தும் மொபைல் எதையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வது இல்லை. டெல்லியில் இவர்கள் நடத்தி வந்த கால் சென்டரில் அத்தனை மொபைல்களும் இருந்துள்ளது.

போலீசார் கைப்பற்றியது தெரியாமல் கூட பலர் பல மொபைல்களுக்கு அழைத்து, தங்களுக்கு நல்ல வேலை ஏற்பாடு செய்து கொடுங்கள் எனக்கூறி உள்ளனர். எஸ்.பி., பிரஸ் மீட் நடைபெற்ற போது கூட பல மொபைல்களில் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

இதனை பார்த்து, எஸ்.பி.,யே ஒரு கட்டத்தில் மனம் நொந்து போனார். 'வேலை தருபவர்கள் யாராவது வேலைக்கு சேருவதற்கு முன் முதலில் பணம் கொடு என்று கேட்பார்களா?' இப்படி ஒரு அடிப்படை விஷயம் கூட தெரியாமல் மக்கள் பணத்தை கொடுத்து ஏமாறுகிறார்களே' என வருத்தத்தை பதிவு செய்தார்.

இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, 'தமிழகம் முழுவதும் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் மூலம் இணையவழி குற்றங்கள் எப்படியெல்லாம் நடக்கும். இதனை தடுப்பது எப்படி? நாம் எப்படி சுதாரித்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக' தெரிவித்தார்.

Tags:    

Similar News