தலைகீழாக மாறியது தேனி மாவட்டத்தின் பருவநிலை
தேனி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மெல்லிய சாரல் மற்றும் ஈரக்காற்றால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் எவ்வளவு வெயில் இருந்தாலும் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் மக்களை பாதிக்காது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரியில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில் ஜூன் 5ம் தேதி வரை வெளுத்துக்கட்டியது.
காற்றில் ஈரப்பதம் 38 சதவீதம் வரை குறைந்தது. இதனால் அனல் காற்று வீசியது. பொதுமக்கள், விவசாயிகள் தவித்துப்போயினர். மழை இல்லாமல் தோட்டக்கலை விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூன் 5ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மாறியது. 3 மணிக்கு வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மேகங்கள் திரண்டு இருட்டு கட்டியது. திடீரென குளிர்ந்த சாரல் காற்றுடன் கூடிய இதமான பருவநிலை மாவட்டம் முழுவதும் உருவானது. மாலை 5.30 மணிக்கு சாரல் தொடங்கியது. சில இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் எல்லாப்பகுதிகளிலும் சாரல் மழை இரவு 10 மணி வரை பெய்தது.
ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. தொடர்ந்து ஏழு மாதங்களாக மாவட்டம் குளுகுளுவென்றே இருக்கிறது. பகல் பொழுதில் வெயில் இருந்தாலும் ஈரப்பதம் நிறைந்த காற்று வீசி வருவதால், மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. நேற்றும், இன்றும் மதியம் 3 மணிக்கு வழக்கம் போல் மேகங்கள் திரண்டு வெயிலை முற்றிலும் மறைத்தன.
ஊட்டி, கொடைக்கானல், மூணாறு போல் தேனி மாவட்டத்தில் நிலவிய குளிர்ச்சியான பருவநிலை மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.