தேனி நலம் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு மூலம் விழித்திரையினை பரிசோதிக்கும் வசதி தேனி நலம் மருத்துவ மனையில் தொடங்கப்பட்டுள்ளது.;
தேனி நலம் மருத்துவமனையில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, கண்நோய்கள், கல்லீரல் நோய் உட்பட பல்வேறு முக்கிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன மருத்துவ வசதிகள் உள்ளன. பொதுவாக மருத்துவமனையில் எந்த அளவு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியுமோ, அந்த அளவு நவீன நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நோயின் தன்மை துல்லியமாக கணிக்கப்படுவதோடு, சிகிச்சை நடைமுறையும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது உலகின் அதிநவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவும் தேனி நலம் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கண் விழித்திரைகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தேனி நலம் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு மூலம் விழித்திரை பரிசோதிக்கும் மையத்தின் திறப்பு விழா நடந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை சேர்மன் நம்பெருமாள்சாமி தொடங்கி வைத்தார். நலம் மருத்துவமனை இயக்குனர் ராஜ்குமார், நிர்வாக மேலாளர் வனிதா ராஜ்குமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடார், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் தத்தா, நலம் மருத்துவமனை டாக்டர்கள் பிரபாகரன், முகமதுபாஷித், நலம் அவசர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணரும், நலம் மருத்துவமனை இயக்குனருமான டாக்டர் ராஜ்குமார் பேசியதாவது: தற்போதய சர்வே கணக்குப்படி நுாற்றுக்கு 14 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. சர்க்கரை நோயாளிகளில் சிலர் பார்வை இழப்பினை சந்தித்து வருவது மிகவும் வேதனையான விஷயம். சர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பினை தடுக்கவும், பார்வை இழப்பு ஏற்படும் முன்னரே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் அரவிந்த் கண் மருத்துவமனை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூறிய புதிய கேமராவை வடிவமைத்துள்ளது. இந்த கேமரா மூலம் டாக்டர்கள் ஓரிரு நிமிடங்களில் விழித்திரை பரிசோதனையினை மிகவும் துல்லியமாக கண்டறிந்து விடுவார்கள். விழித்திரை குறைபாடுகள் மிகவும் துல்லியமாக கண்டறிப்படுவதோடு, சிகிச்சை அளிக்கும் நடைமுறையும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் முன்னேற்றம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். மிகவும் துல்லியமாக சிகிச்சை மூலம் அவர்களைது விழித்திரையினை பாதுகாத்து, பார்வை இழப்பினை தடுத்து விட முடியும். தேனி நலம் மருத்துவமனையில் இதற்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நலம் மருத்துவமனை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்படுகிறது. சிசிக்சைக்கு வரும் நோயாளிகளில் சர்க்கரை நோயினை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது. தவிர நோயாளிகளுக்கு நெருப்பில்லாத சமையல், விழிப்புணர்வு கோலப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாறு பேசினார்.