நகராட்சித்தலைவர் மேடம்… கொஞ்சம் இதையும் கவனிங்க…
தேனியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.;
தேனி-அல்லிநகரம் நகராட்சி. 1964 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. 1972 இல், இரண்டாம் நிலை நகராட்சி என வகைப்படுத்தப்பட்டது. பின்னர்1983,-ல் முதல் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர்.2008 -ல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து .2023-ல் இந்நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது
தேனியில் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை, வாரந்தோறும் சனிக்கிழமை கூடுகிறது. வெள்ளி இரவே வியாபாரிகள் சந்தைக்கு வந்து விடுவார்கள். சனிக்கிழமை முழுமையாக வியாபாரம் நடைபெறும்.
குறைந்தது 350 முதல் 500 கடைகள் வரை அமைக்கப்பட்டிருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும்.சந்தை அமையும் இடத்தின் சுகாதாரம் மட்டுமே ஆரம்ப காலம் முதலே கேள்விக்குறியாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்தாலும், இந்த வளாகத்தை பலரும் உலர் கழிப்பிடமாகவே பயன்படுத்துகின்றனர். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வேலைகள் நடக்கின்றன. சந்தை கூடும் போது இதனை சுத்தம் செய்யவே முடியாது. முதல்நாள் இரவில் வரும் வியாபாரிகள் பல நேரங்களில் இந்த கழிவுகள் மீது சாக்கை விரித்து காய்கறிகளை பரப்பி விற்கின்றனர்.
மிகவும் அசுத்தமான சூழலில் காய்கறிகள் விற்கப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கு நோய் வராமல் என்ன செய்யும். மக்கள் காசு கொடுத்து நோய் வாங்கும் சூழல் தான் இங்கு நிலவுகிறது. இதேபோல் இருந்த கம்பம் வாரச்சந்தை தற்போது பல கோடி செலவில் சுத்தப்படுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டு விட்டது.
தேனி சந்தை வளாகத்தை சுத்தம் செய்ய முடியாவிட்டால், வேறு இடத்திற்கு மாற்றி அங்கு சந்தையை செயல்படுத்த வேண்டும். இப்படி ஒரு கழிப்பிடப்பகுதியை சந்தையாக செயல்படுத்துவதை சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர்.
இந்த அவல நிலையை, தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் இதனை சரி செய்ய வேண்டும். சந்தை வியாபாரிகள் உழைத்து மிகவும் நியாயமான முறையில் சம்பாதிக்கவே சந்தைக்கு வருகின்றனர். கட்டணம் கட்டியே கடை விரிக்கின்றனர். கட்டணம் வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் ஏன் அதனை சுத்தப்படுத்தக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
தவிர சந்தை வியாபாரிகளின் சுகாதாரமும், அங்கு பொருட்கள் வாங்கும் மக்களின் சுகாதாரமும் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். இதனை இனியும் நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது முறையல்ல. சந்தை வியாபாரிகளுக்கு பாதுகாப்பான சுத்தமான இடத்தை ஒதுக்கி தர வேண்டும். நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் இதனை செய்வார் என்று மக்கள் நம்பினர். ஆனால் இதுவரை அவரும் இந்த அவல நிலையை வேடிக்கை மட்டுமே பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.