தேனிக்கு அமைச்சர் பதவி கிடையாது? சூசகமாக தெரிவித்த தமிழக முதல்வர்

தேனி மாவட்டத்தில் இனி யாருக்கும் அமைச்சர் பதவி கிடையாது என சூசகமாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விட்டதால் திமுகவினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Update: 2022-05-13 13:30 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் (பைல் படம்)

தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் அமைச்சர் அல்ல. தேனி மாவட்டத்திற்கும் அமைச்சர் தான். அவரை தேனி ஐ.பெரியசாமி என்றே கூப்பிடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர். அந்த அளவு உழைக்கிறார்' என புகழ்ந்து தள்ளினார். அரசு விழாவில் ஸ்டாலின் ஏன் ஐ.பெரியசாமியை இப்படி புகழ்ந்தார் என தி.மு.க.,வினர் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் மூத்த அரசியல்வாதி ஒருவர் இதற்கு விளக்கமளித்தார்.

அதாவது விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வர உள்ளது. ஒரு சிலர் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலர் அமைச்சர் கனவில் மிதக்கின்றனர். அவர்களுக்கு அமைச்சர் பதவி தர முதல்வருக்கு விருப்பம் இல்லை. இதனை வெளிப்படையாக கூறாமல், 'தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தான் பொறுப்பு அமைச்சர். எனவே அவரை தேனி பெரியசாமி என கூப்பிடுங்கள்' என கூறியதன் மூலம், தேனி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரை கொடுத்து விட்டேன்.

இனிமேல் தேனி மாவட்டத்தை சேர்ந்த யாரும் என்னிடம் அமைச்சர் பதவி கேட்டு வந்த நிற்க கூடாது' என மறைமுகமாக கூறி விட்டார். இதனை புரிந்த சிலரின் முகம் வாடிவிட்டதே நீங்கள் கவனிக்கவில்லையா' என கூறிய பின்னரே தேனி மாவட்ட திமுகவினருக்கு முதல்வர் பேச்சின் அர்த்தம் புரிந்தது. இதனால் நம் மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லையா என சோகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News