தேனி நகராட்சி தலைவர் பதவி ராஜினாமா இல்லை: தி.மு.க., திட்டவட்டம்
தேனி நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என திமுக நகர செயலாளர் பாலமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.;
தேனி நகராட்சி தலைவர் பதவி தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிக இடங்களை பெற்ற தேனி நகர தி.மு.க., மாநில தலைமையை மீறி தலைவர் பதவியை கைப்பற்றியது. இந்த பதவியை ராஜினமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தி.மு.க., தலைமைக்கும், காங்., தலைமைக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. பல கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. நாளை பதவியேற்பு உறுதியாகி உள்ள நிலையில் (ஓரிரு நாள் தள்ளிப்போகவும் வாய்ப்புகள் உண்டு) இது குறித்து தேனி நகர செயலாளர் பாலமுருகனிடம் கேட்ட போது, 'எனது மனைவி ரேணுப்பிரியா பாலமுருகன் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். அவர் பதவியேற்கும் படங்களை நானே உங்களுக்கு (நிருபர்களுக்கு) கொடுப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை' என்றார். இது குறித்து தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்க.தமிழ்செல்வனிடம் கேட்டதற்கு, 'பாலமுருகன் நாளை காலை 10 மணிக்கு தனது மனைவியிடம் சொல்லி பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். பாலமுருகன், அவரது மனைவி ரேணுப்பிரியா இருவரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்' என்றார்.