மனதை வருடிச்செல்லும் தேனி நான்கு வழிச்சாலை பயணம்

தேனி மாவட்டத்தின் இயற்கை அழகு, குளிர்ச்சியான பருவநிலை நான்கு வழிச்சாலையில் பயணம் செய்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது

Update: 2022-11-22 04:45 GMT

தேனி பூதிப்புரத்தில் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போதே, கண்ணில் தென்படும் இயற்கையின் பேரழகு.

திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை தேனி மாவட்டத்தில் சுமார் 90 கி.மீ., துாரத்திற்கும் மேல் கடந்து செல்கிறது. இதில் காட்டு ரோட்டில் இருந்து தேனி வரை சாதாரண பயணம் போலவே தோன்றும். தேனிக்குள் நுழைந்ததும் இயற்கையின் அதகளம் தொடங்கி விடுகிறது. மாவட்டத்தின் பருவநிலையே எல்லோரையும் கவர்ந்து விடும். சில்லென்ற காற்றுடன், வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் பாதி இருளடைந்து காணப்படும் பருவநிலையே பயணிகளை சொக்க வைத்து விடும். அடுத்து தேனி நுழைவு வாயிலேயே வீரப்ப ஐய்யனார் கோயில் மலை பயணிகளை வரவேற்கும்.

இந்த மலையடிவாரத்திலேயே அடுத்த 60 கி.மீ., நீள பயணமும் அமையும். அடுத்து பசுமைப்புல்வெளியும், தென்னை மரங்களும், ரயில்வே தண்டவாளத்தால் இரண்டாக பகிரப்பரப்பட்ட பூதிப்புரம் கண்மாயும், கொட்டகுடி ஆறும், வீரபாண்டி வயல் வெளிகளும், வீரபாண்டி முல்லைப்பெரியாறும் கண்களுக்கு குளிர்ச்சியாக அடுத்தடுத்து விருந்தளிக்கும். திருச்சியை கடக்கும் போது, எப்படி காவிரி ஆற்றை வியந்து பார்ப்போமோ... பாம்பம் பாலத்தை கடக்கும் போது இருபுறமம் இருக்கும் கடலை எப்படி வியந்து பார்ப்போமோ... அதேபோல் தான் தேனி மாவட்டத்தில் ஆச்சர்யமான இயற்கை அழகினை ரசித்துக் கொண்டே பயணிக்க வேண்டியது வரும். இமை மூடும் நேரத்தில் கூடஒரு சிறிய இயற்கை அழகினை இழந்து விடுவோம். எனவே பயணிகள் கவனமுடன் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே பயணிக்க வேண்டும்.

வீரபாண்டியை தாண்டியதும் டோல்கேட்டில் காருக்கோ, வேனுக்கோ கட்டணம் செலுத்தும் போது சற்று எரிச்சல் இருந்தாலும், அடுத்து சின்னமனுார் வயல்வெளிகளுக்குள் நுழையும் ரோடு இந்த எரிச்சல் சட்டென மறைந்து விடும். இந்த ரோட்டின் மேற்கு பகுதியில் வயல்வெளிகளுக்குள் கம்பீரமாக அமைந்திருக்கும் பூலாநந்தீஸ்வரர் ஆலயத்தை தவறாமல் கவனிக்க வேண்டும். வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அதன் ராஜகோபுரம் அத்தனை அழகு.

இப்படி வயல்வெளிகளுக்கு மத்தியில் உத்தமபாளையத்தை கடக்கும் ரோடு, உத்தமபாளையம் தாண்டியதும், கம்பம் வரை கிராமங்களை கடந்து செல்லும். கம்பத்தை கடந்ததும் மீண்டும் மலையடிவாரப்பயணம். கூடலுார் பைபாஸ் ரோட்டில் ஏறியதும், இயற்கையின் வளமையை கண்டு நாம் வியந்து தான் போவோம். மலையை ஒட்டிச் செல்லும் ரோட்டில் கொட்டும் அருவியும், பாலத்தை தொட்டு நிற்கும் முல்லைப்பெரியாற்று நீரும், தோட்டங்களும், தோப்புகளும், இளையராஜாவின் பங்களாவும், பகவதியம்மன் கோயிலும் கண்டு ரசிக்கும் முன்னரே மிகப்பிரமாண்டமான கண்ணகி மலையடிவாரத்திற்குள் ரோடு நுழைந்து விடும்.

குமுளி மலைப்பாதை நிச்சயம் மற்ற மலைப்பாதைகளைப்போல் பயணிகளை மிரட்டாது. அடர்ந்த வனத்திற்குள் ஆறு கி.மீ., துாரம் செல்லும் இந்த குமுளி மலைப்பாதை இடையே இறைச்சல் பாலம், பெரியாறு மின்திட்ட ராட்சத குழாய் என நமது விழிகளை விரிய வைக்கும். மலைப்பாதையில் ஏறிய ஒரு சில நிமிடங்களில், பச்சைப்பசேல் என ஒட்டுமொத்த தேனி மாவட்டமும் தெரியும். அதாவது அடர்ந்த வனத்திற்குள் ஆங்காங்கே தெரியும், குடியிருப்புகளுக்கான கட்டடங்களும், கண்மாய்களி்ல் தேங்கி நிற்கும் நீரும், தோப்புகளும், மரங்களுமாக குளிர்ச்சியை அள்ளித்தெளிக்கும். அதனை ரசித்துக் கொண்டே கடவுளின் பூமி என வர்ணிக்கப்படும் கேரளாவிற்குள் நுழைந்து விடுவோம். அதன் பின்னர் நாம் கிட்டத்தட்ட வனத்திற்குள்ளேயே தான் கேரளாவில் பயணிக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் பலரும் இப்படி அடிக்கடி ரோட்டில் டூ வீலரில் பயணித்து இயற்கையை ரசிப்பதை பழக்கமாகவே வைத்துள்ளனர். வெளிமாவட்ட பயணிகள் எல்லோருக்கும் (பலர் டூ வீலரில் வருகின்றனர்) டூ வீலர் பயணம் என்பது சாத்தியமில்லை. எனவே பஸ்சிலோ, காரிலோ, வேனிலோ பயணிக்கும் போது இயற்கையை மிஸ் பண்ணிடாதீங்க...

Tags:    

Similar News