தேனி: விவசாய பயன்பாட்டிற்கு கண்மாய்களில் இலவசமாக மண் எடுப்பது எப்படி?
தேனி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு கண்மாய், குளங்களில் இலவசமாக மண் எடுப்பது எப்படி? என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண்மாய்கள், குளங்களில் மண் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் இரண்டு நல்ல பயன்கள் கிடைக்கின்றன. ஒன்று கண்மாய்கள், குளங்கள் ஆழப்படுத்தப்படும். அதன் நீர் பிடிக்கும் அளவும் அதிகரிக்கும். அதேபோல் கண்மாய்கள், குளங்களில் இருக்கும் செறிவு நிறைந்த மண்ணை எடுத்து நிலங்களில் போடுவதன் மூலம் விவசாய நிலம் வளமாகும். உரமிடும் செலவுகள் குறையும். விளைச்சல் பெருகும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் விவசாய பயன்பாட்டிற்கு கண்மாய்கள், குளங்களில் இலவசமாக மண் எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. வரும் பருவமழை காலத்திற்கு முன்பே மண் எடுத்து விட வேண்டும். இதன் மூலம் மழைக்காலத்தில் கண்மாய்கள் குளங்களில் நீர் சேமிக்க முடியும். அதேபோல் மண்பாண்ட தொழிலாளர்களும் தங்களது தேவைக்கு களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். இதர தேவைகளுக்கு சவுடு மண், கிராவல் மண் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது நிலத்தின் வரைபடம், பட்டா, சிட்டா, அடங்கல், வி.ஏ.ஓ.,விடம் நில உரிமை சான்றிதழ், எடுக்க வேண்டிய மண்ணின் பரிசோதனை சான்று, ஆகியவற்றுடன் ஒவ்வெரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம். அனுமதி கிடைத்த 20 நாட்களுக்குள் தங்களுக்கு தேவையான மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.