தேனி இந்து நாடார் உறவின் முறை கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
தேனி இந்து நாடார் உறவின்முறை சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சார்பில் நடத்தப்படும் நாடார் கலை, அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா உறவின் முறைத்தலைவர் கே.பி.ஆர்., முருகன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இணைச் செயலாளர் காளிராஜ், இணைச்செயலாளர்கள் சுப்புராஜ், வன்னிராஜன் வாழ்த்து வழங்கினர். கல்லுாரி முதல்வர் சித்ரா வரவேற்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் 718 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலை தேர்வில் முதல் 15 இடம் பெற்ற மாணவிகளுக்கும், இரண்டாம் இடம் பெற்ற 11 மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கினார்.
அவர் பேசும்போது, கல்வியோடு யோகாவையும் கற்றுக்கொண்டால், உடலையும், மனதையும் நோய் அணுகாமல் பார்த்துக் கொள்ள முடியும். எப்போதும் உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். தொடர் முயற்சி எப்படியும் வெற்றியை தேடித்தரும். சாதனை செய்ய வேண்டும் என்ற தீப்பொறி உங்களுக்குள் நிறைந்திருக்க வேண்டும். படிப்பதற்காக தலைகுனிந்தால், வாழும் போது தலைநிமிரலாம். கல்வியோடு திறமைகளையும் மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.