தினமும் பள்ளி நேரத்தில் நெரிசலில் சிக்கித் தவிக்கும் தேனி
தேனியில் தினமும் பள்ளி நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் திணறி வருகின்றனர்.
தேனி நகர்ப்புறம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் பள்ளி நிர்வாகங்களும் ஏராளமான பஸ்களை இயக்குகின்றன.
தினமும் காலை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வணிக நிறுவனங்களுக்கு செல்பவர்கள் என பலரும் ஒரே நேரத்தில் புறப்பட்டு வருவதால் நகரின் சாலைகளில் காலை 7 மணிக்கே நெரிசல் தொடங்கி விடுகிறது.
இந்த நெரிசல் 10.30 மணி வரை நீடிக்கிறது. அடுத்து வழக்கமான போக்குவரத்து நெரிசல் தொடங்கி விடுகிறது. தேனியில் உள்ள ரோடுகளின் தாங்கும் திறனை தாண்டி பல ஆயிரம் வாகனங்கள் வருவதாக போக்குவரத்து போலீசார் புலம்புகின்றனர்.
இந்த நெரிசலை தீர்க்க மதுரை ரோட்டிலும், பெரியகுளம் ரோட்டிலும் மேம்பாலங்கள் கட்டுவது மட்டுமின்றி, பைபாஸ் ரோடு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.