மோசமான நீர்மேலாண்மையால் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்
தேனி மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்தும் நீர் மேலாண்மை தோல்வியால் கண்மாய்கள் வறண்டுபோனதாக விவசாயிகள் புகார்
தேனி மாவட்டத்தில் வழக்கத்தை விட 70 சதவீதம் அதிகளவு மழை பெய்தும், மோசமான நீர்மேலாண்மையால் பல கண்மாய்கள் இன்னும் நீரின்றி வறண்டு கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதிகளவு மழை பெய்துள்ளது. சராசரி மழையளவை விட 70 சதவீதம் அதிகளவு மழை கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக மாவட்டத்தில் அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன. இன்னும் அணைகள் அனைத்தும் முழு அளவில் நிரம்பியே காணப்படுகின்றன. ஆனால் என்ன பயன். இன்னும் பல கண்மாய்களுக்கு தண்ணீர் எட்டவில்லை. பொதுப்பணித்துறையின் மோசமான நீர்மேலாண்மையே இதற்கு காரணம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் 40 கண்மாய்களுக்கு போதிய தண்ணீர் சென்று சேரவில்லை. சண்முகாநதி அணை மூலம் நிரப்பப்படும் கண்மாய்கள் ஒன்று கூட இன்னும் நிரம்பவில்லை. எரசக்கநாயக்கநாயக்கனார், முத்தலாபுரம், கமாட்சிபுரம், பூலாநத்தபுரம், எம்.பெருமாள்பட்டி, ஓடைப்பட்டி போன்ற பல கிராமங்கள் மாவட்டத்தின் மழை மறைவு பகுதிகளில் அமைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தாலும், இந்த கிராமங்களில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும்.
இந்த ஆண்டும் இப்பகுதிகளில் மழை குறைவு என்றாலும், இதர ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மழையளவு அதிகம். ஆனால் இப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் எந்த கண்மாய்களும் முழுமையாக நிரம்பவில்லை. ஏதோ பெயருக்கு தண்ணீர் கிடக்கிறது. பொதுப்பணித்துறையின் மோசமான நீர்மேலாண்மையே இதற்கு காரணம் என விவசாயிகள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.