தேனி: மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

போடிநாயக்கனூரில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-06-05 13:53 GMT

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடிநாயக்கனூர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி விடுதி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் உடைகள், முகக்கவசம், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தின் பின்புறம் குழி தோண்டி புதைக்கப்படுவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கும் மேலான நிலையில் குழி தோண்டுவதற்கும், புதைப்பதற்கும் வாகனம் கொண்டு வரப்படாத நிலையில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகள் குவியலாக தேங்கிக் கிடக்கிறது. இதில் காற்று வீசுவதால் முகக்கவசம் உள்ளிட்டவை காற்றில் வேறு இடங்களுக்கு பறந்து செல்கிறது. கழிவுகளுடன் உணவு பொருட்களும் சேர்ந்துள்ளதால் நாய், பன்றி போன்றவை கழிவு பொருட்களை கலைத்து விடுகின்றன.

இதனால் கழிவுகள் வேறு இடங்களுக்கும் பரவி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள போடி, தருமத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், மேலச்சொக்கநாதபுரம், வினோபாஜி காலனி உள்ளிட்டபொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை முறையாக அகற்றவோ, அழிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News