தேனி மாவட்ட நெல் வயல்களில் விவசாயிகள் தட்டை பயறு விதைப்பு
கூடலூல் சாமி வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் நெல் வயல்களில் தட்டைப்பயறு விதைத்து வருகின்றனர்.
கம்பம் அருகே கூடலூர் முல்லைப்பெரியாற்றில் குறுவனத்துப்பாலத்தில் தொடங்கும் சாமி வாய்க்கால் காஞ்சிமரத்துறையில் இரண்டாக பிரிந்து மீண்டும் தாமரைக்குளத்தில் ஒன்று சேர்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால், வாய்க்கால் வழியாக வர வேண்டிய தண்ணீர் வரவில்லை. இதனை சரி செய்து வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் தெய்வேந்திரன், பாரதிய கிஷான் சங்க தலைவர் சதீஸ்பாபு உள்ளிட்ட பல விவசாயிகள் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மொத்தம் 52 முறை மனு கொடுத்தும் இதனை சீரமைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த விவசாயிகள் நெல் வயல்களில் தட்டைப்பயறு விதைத்து வருகின்றனர்.
இது குறித்து தெய்வேந்திரன் கூறும்போது
அதிகாரிகளை நம்புவதில் பலனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டோம். சிறிய அளவிலான பணிகளை செய்ய கூட பெரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கவலைப்படுவதில்லை. எனவே மனு கொடுத்து ஓய்ந்து போய், வேறு வழியில்லாம் தட்டைப்பயறு விதைத்து வருகிறோம். எங்கள் பகுதியில் மட்டும் 50 ஏக்கருக்கும் அதிக நெல் வயல்களில் தட்டைப்பயறு விதைத்துள்ளோம். தேனி கலெக்டர் முரளீதரன் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றார்.