தேனி மாவட்டத்தில் கண் துடைப்பு நாடகம் நடத்தும் உணவு பாதுகாப்புத்துறை
தேனி மாவட்டத்தில் உணவுப்பாது காப்புத்துறை அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம் நடத்துவதாக சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தேனி மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் பெரியகுளத்தில் பார்மலின் தடவிய மீன்கள் விற்பனை குறித்து ஆய்வு நடத்தினர். அடுத்து போடியில் ஆய்வு நடத்தினர். தற்போது கம்பம், கூடலுார் பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆய்வு நடத்திய சில்லரை விற்பனை கடைகளில் யாரும் பார்மலின் வாங்கி மீன்களை பதப்படுத்துவது இல்லை.
இவர்களுக்கு விநியோகம் செய்யும் மொத்த மீன் வியாபாரிகளுக்கே பார்மலின் வாங்கும் திறனும், அதனை பதப்படுத்தும் பக்குவமும் தெரியும். இவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் விட்டு விடும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இவர்களிடம் மீன்களை வாங்கி சில்லறையில் விற்கும் சிறு வியாபாரிகளிடம் பார்மலினில் பதப்படுத்திய மீன்களை ஏன் விற்கிறாய் என கேள்வி கேட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
சிறு வியாபாரிகளால் எப்படி பார்மலின் வாங்கி இருப்பு வைக்க முடியும். பிரச்சினை தொடங்கும் இடத்திலேயே முடிக்காமல் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, சிறு வியாபாரிகளை துன்புறுத்தி தங்கள் கடமையினை சரிவர செய்வது போல் நாடகம் நடத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது சிறுவியாபாரிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.