வெள்ளத்தில் மிதந்தது தேனி: 2 மணி நேரத்தில் 127 மி.மீ. மழை
Heavy Rain News -தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. தேனியில் 2 மணி நேரத்தில் 127 மி.மீ. மழை பொழிவு பதிவானது
Heavy Rain News -தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணி வரை 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. அதன் பின்னர் சாரல் பெய்தது.
இந்த 2 மணி நேரத்தில் மட்டும், ஆண்டிபட்டியில் 24 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 127 மி.மீ., போடியில் 25.6 மி.மீ., கூடலுாரில் 28.4 மி.மீ., மஞ்சளாறில் 63 மி.மீ., பெரியகுளத்தில் 91 மி.மீ., பெரியாறு அணையில் 38 மி.மீ., தேக்கடியில் 30.2 மி.மீ., சோத்துப்பாறையில் 25 மி.மீ., உத்தமபாளையத்தில் 13.4 மி.மீ., வைகை அணையில் 69.2 மி.மீ., வீரபாண்டியில் 64.2 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.
குறிப்பாக தேனியில் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியது. மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடுகளில் 3 அடி உயரத்திற்கும் மேல் வெள்ளம் சூழ்ந்து நின்றது. அந்த நேரத்தில் பள்ளி நேரம் முடிந்து மாணவ, மாணவிகளும் வெளியே வந்தனர்.
மழையில் நனைந்து கொண்டே மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர். ஆட்டோ, பஸ்களில் சென்ற மாணவ, மாணவிகள் வாகனங்களும் வந்தன. இதனால் தேனி பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரு சிலை பகுதிகளை கடந்து அரை கி.மீ., செல்லவே 20 நிமிடத்திற்கு மேல் ஆனது. ஒரு புறம் பெரும் கொட்டும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு, மறுபுறம் கடும் நெரிசல் என தேனியே திணறித் தவித்த நிலையில் சாலையோர வியாபாரிகளின் நிலை மிகவும் பரிதாபத்துகுரியதாக மாறிப்போனது.
ரோட்டோரம் அமைக்கப்பட்டிருந்த எடுப்பு ஜவுளிக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஜவுளிகள் முழுவதும் நனைந்து வீணாகிப்போயின. தவிர ரோட்டோர டிபன் கடைகள், ஸ்நாக்ஸ் கடைகள், தள்ளுவண்டி கடைகள் வைத்திருந்த அனைத்து வியாபாரிகளும் மிகவும் சோர்ந்து போயினர். அத்தனை பேருக்கும் நேற்று மாலைப்பொழுது பெரும் நஷ்டத்தை கொடுத்தது. விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. அனைத்து ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஒட்டுமொத்த மாவட்டமும் பரிதவித்ததால் மாவட்டம் முழுவதும் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், கலெக்டர் முரளீதரனும், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரேவும் களத்தில் இறங்கி கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த மழைக்கு ஒருவர் உயிரிழந்தார். ஒரு இடத்தில் மரம் சாய்ந்தது. ஒரு மின்கம்பம் சாய்ந்தது. வயல்கள், தோட்டங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்தது. உண்மையான சேத மதிப்பீடு இன்று தொடங்க உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதனிடையே கேரளாவில் அக்.19 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எல்லோ அலர்ட் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழைமுடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று பலத்த மழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இம்மாவட்டங்கள் தவிர திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று முதல் அக்.19 வரை எல்லோ அலர்ட் விடப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2