இரவில் கொள்ளை போகும் தேனி மாவட்ட கனிம வளங்கள்

தேனி மாவட்ட கனிம வளங்கள் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கப்படுகிறது. வருவாய்த்துறையும், போலீஸ்துறையும் கண்டு கொள்ளாத போக்கினை கையாண்டு வருகின்றன.;

Update: 2022-03-20 11:43 GMT

கோப்பு படம் 

தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்த வளமான மாவட்டம். இந்த வளம் தான் தேனி மாவட்டத்திற்கு தற்போது பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆண்டிபட்டி பகுதியில் உள்ள செங்கல் காளவாசல்களில் தயாராகும் செங்கல் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் தரமான செங்களாக உள்ளது. இப்பகுதியில் மட்டும் 100க்கும் அதிகமான செங்கல்சூளைகள் உள்ளன. தினமும் பல லட்சம் செங்கல்கள் தயாராகின்றன. மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் என தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து செங்கல்கள் செல்கின்றன. காரணம் இங்கு தயாராகும் செங்கல்களின் விலையும் குறைவு. தரமும் அதிகம். தினமும் பல லட்சம் செங்கல்கள் இங்கிருந்து வெளியேறும் போது, எத்தனை டன் மண், மணல் இங்கிருந்து செங்கலாக மாறி வெளியேறுகிறது என்பதை மதிப்பிட்டால் தலைசுற்றி விடும். ஆமாம் தினமும் கணக்கில் அடங்காத அளவுக்கு செங்கல் இங்கிருந்து வெளியேறுகிறது.

இவற்றிற்காக தினமும் பல நுாறு டன் மண், மணல் தோண்டி எடுக்கப்படுகிறது. இதில் 90 சதவீதம் உரிமம் இன்றி எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்க வருவாய்த்துறைக்கும், போலீசாருக்கும் மாதந்தோறும் பல லட்சம் கப்பம் கட்டுகின்றனர். இப்படி வசூலாகும் கப்பத்தின் அளவினை கேட்டால், அசந்து போய் விடுவீர்கள். அத்தனை லட்சம் இல்லை. கோடி ரூபாய்கள் மாதந்தோறும் லஞ்சமாக அதிகாரிகளுக்கு சென்று சேருகிறது.

அதேபோல் தேனி மாவட்டத்தில் இருந்து கல், மணல், மண் மூன்றும் கேரளாவிற்கு தடையற்ற வர்த்தகம் என்ற ஒப்பந்த அடிப்படையில் செல்கிறது. இதன் மதிப்பும் தினமும் பல லட்சம் ரூபாயினை தாண்டும்.இதனை மதிப்பீடு செய்தாலும் தலை சுற்றி விடும். இப்படி கனிம வளங்கள் கொள்ளைடிக்கப்பட்டு கொண்டிருக்கும் நி்லையில், கனிம வளத்துறையோ எதுவுமே நடக்காதது போலவே, அமைதி காத்து வருகிறது. மாவட்ட ஆட்சியர், மாநில அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தேனி மாவட்டம், பள்ளத்தாக்கு மாவட்டமாக இல்லை.. மண், கல் அள்ளி, அள்ளி மிகுந்த பள்ளமான மாவட்டமாக மாறி விடும். அதன் பின்னர் இயற்கை பேரிடர்களை தவிர்க்க முடியாத நிலை உருவாகி மக்கள் கடும் துயரத்தை அனுபவிக்க நேரிடும். இயற்கை அழிவை பாதுகாக்க அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News