ஏலக்காய் எடுப்பு மும்முரம்: கேரளாவிற்கு செல்லும் தேனி மாவட்ட தொழிலாளர்கள்

கேரளாவில் ஏலக்காய் எடுப்பு சீசன் மும்முரமாக தொடங்கி உள்ளதால் தேனி மாவட்டத்திலிருந்து தினமும் 50,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.

Update: 2022-11-22 04:47 GMT

ஏலக்காய் (மாதிரி படம் )

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை நல்ல முறையில் பெய்துள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாய பணிகளில் ஒப்பந்தப் பணிகளை தவிர்த்து மற்ற பணிகளில் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதிகபட்சம் ஒரு தொழிலாளிக்கு தினக்கூலியாக 300 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும். இதனால் கூலித்தொழிலாளிகள் பலரும் உள் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். அதிகளவு பணி, அதேநேரம் குறைந்த சம்பளம் வழங்குவதே இதற்கு அடிப்படை காரணம் ஆகும். 

ஆனால் கேரளாவில் ஒரு தொழிலாளிக்கு 600 ரூபாய் வரை சம்பளம் தருகின்றனர். சிலர் தாங்களே வேன் வைத்து அழைத்துச் சென்று திரும்ப கொண்டு வந்து இறக்கி விடுகின்றனர். சில இடங்களுக்கு பேருந்தில் சொந்தமாக டிக்கெட் எடுத்து தொழிலாளர்கள் செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் 60 ரூபாய் வரை மட்டுமே பேருந்து  செலவு ஆகும். எனவே பேருந்து செலவு போக  540 ரூபாய் சம்பள பணம் மீதமாகும். தவிர இரண்டு நேரம் வடை மற்றும் காபி அல்லது டீ கொடுக்கின்றனர்.இதனை விட கூடுதல் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் இருக்கின்றனர். வேலையின் தன்மைக்கு ஏற்ப சம்பளத்தின் அளவு கேரளாவில் மாறும்.

இந்த சலுகை காரணமாக தேனி மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் கேரளாவிற்கு வேலைக்கு செல்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்கின்றனர். இவர்கள் குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு மலைப்பாதை, போடி மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.

பலர் பேருந்துகளில் சென்றாலும், ஜீப்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். குறைந்தபட்சம் 7 பேர் பயணிக்கும் ஒரு ஜீப்பில் 13 பேர் வரை பயணிக்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் நேர்வதற்கு முன் இந்த விதிமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் எச்சரிக்கின்றனர். தொழிலாளர்கள் போய் வரும் முறைகள் மட்டுமே அச்சமூட்டுவதாக உள்ளது. மற்றபடி வேலைக்கு செல்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

தற்போது கேரளாவில் சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. இன்னும் ஐந்து மாதத்திற்கும் மேல் சீசன் நீடிக்கும். கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டு கேரளாவில் விளைச்சல் நல்ல முறையில் இல்லை. கூடுதல் மழை, பருவநிலை பாதிப்பு, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் நெல் நடவுப்பணிக்கு மட்டுமே தினசரி சம்பளம் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இரண்டு போகம் நெல் சாகுபடி பணிகள் நடந்தால், ஆண்டுக்கு ஐம்பது நாள் மட்டுமே ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். மற்ற நாட்களில் முந்நுாறு ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சம்பளத்தை வைத்து எப்படி வாழ்க்கைய நகர்த்துவது. எனவே நாங்கள் விரும்பி கேரளாவிற்கு பணிக்கு செல்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News