தேனி அருகே தொழிலதிபர் காரில் கடத்தல்.. திரைப்பட பாணியில் துரத்திச் சென்று மீட்ட உதவி ஆய்வாளர்...
பணத்திற்காக முதியவரை கடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்கப்பட்டார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி எஸ்.யு.எம்., பள்ளி தெருவை சேர்ந்தவர் அந்திரியா அதிசயம் (70). இவர், ஜெனி விலாஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அந்திரியா அதிசயம் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் இன்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
செல்லாண்டியம்மன் கோயில் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது வெள்ளை நிற காரில் வந்த சிலர் அந்திரியா அதிசயத்தை கடத்திச் சென்றனர். இதனை பார்த்த கிராம மக்கள் சிலர் அவரது மருமகன் ஆனந்தன் என்பவரிடம், உங்கள் மாமாவை வெள்ளை நிற காரில் சிலர் கடத்திச் செல்கின்றனர் என தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனந்தன் உடனடியாக ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் உடனடியாக மாவட்டம் முழுவதும் அலார்ட் செய்தனர். இதற்கிடையே, ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி போலீஸ் சோதனை சாவடியில் ஆண்டிபட்டி உதவி ஆய்வாளற் சுல்தான் பாட்ஷா தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த வெள்ளை நிற டிஎன் 64 பி 8114 என்ற டவேரா வாகனத்தை போலீஸார் சோதனை செய்ய முயன்றதால், அந்த கார் நிற்காமல் புள்ளிமான் கோம்பை ரோடு வழியாக சென்றுள்ளது. சந்தேகம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா தனது இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்திச் சென்றாராம்.. போலீஸ் துரத்துவதை அறிந்த காரில் வந்த கும்பல் தாங்கள் கடத்திச் சென்ற அந்திரியா அதிசயத்தை தங்கள் வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கீழே தள்ளி விடப்பட்டதில் காயமடைந்த முதியவரை உடனடியாக தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா, கார் வைகைப்புதுார் வழியாக செல்வதை ஜெயமங்கலம் போலீஸாருக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜெயமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் போலீஸாருடன் விரைந்து சென்று காமக்காபட்டி அருகே காரை பிடித்தார்.
இருப்பினும், காரில் ஓட்டுநர் பிரபு (வயது 31) மட்டுமே இருந்துள்ளார். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அஜீத், கவுசிகன், அழகுசுந்தரம், திருப்பதி ஆகியோர் தன்னுடன் காரில் வந்ததாகவும், திருப்பதி என்பவர் பணத்திற்காக முதியவரை கடத்தி வந்ததாகவும் கூறி உள்ளார். உடனே, போலீஸார் விரைந்து நடத்திய விசாரணையில் தனியார் தோட்டத்தில் மறைந்திருந்த அஜீத், கவுசிகன் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர்.
அழகுசுந்தரம், திருப்பதி ஆகியோர் தப்பி விட்டனராம். திரைப்பட பாணியில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். இதற்கு காரணமாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா மற்றும் போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.