தொடர் மழையால் தேனி மாவட்ட அருவிகள், ஆறுகளில் குளிப்பதற்கு தடை

Theni Waterfalls -தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், அருவிகள், ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-12 06:26 GMT

சின்னசுருளி அருவியில் கொட்டும் தண்ணீர் (பைல் படம்).

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை  அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஏரி, குளம், கண்மாய்களில் தண்ணீர் ஓரளவு நிரம்பி உள்ளது. இந்த மழைக்கு தேனி மாவட்டமும் விதி விலக்கு அல்ல.இந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் அணைகளில் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

இதனால் அருவிகள், ஆறுகளில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே அருவிகள், ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என வனத்துறையும், பொதுப்பணித்துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது குறித்து தேனி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் எப்போது ஆறுகள், அருவிகளில் வெள்ளம் வரும் என்பதை அறுதியிட்டு கூற முடியவில்லை. கும்பக்கரை, சுருளி அருவி, சின்னசுருளி அருவிகளிலும், அணைக்கரைப்பட்டி தடுப்பணையிலும் வெள்ளம் வந்து, சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டால் மீட்பது மிகவும் சிரமமாக உள்ளது. உயிருடன் மீட்க வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். அதேபோல் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி யாராவது இறந்து விட்டால், அவர்களின் உடலை மீட்க ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு மேல் ஆகி விடுகிறது. காரணம் பல இடங்களில் மீன் பிடிக்க வலைகளை மாட்டி வைத்துள்ளனர். வெள்ளம் வரும் காலங்களில் இந்த வலைகளை எடுக்கவே முடியாது. யாரும் இதனை கவனிப்பதில்லை.

ஆறுகளில் இறங்கி குளிக்கும்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்கள் இந்த வலைக்குள் சிக்கிக்கொள்ளும். அப்படி  மாட்டிக் கொண்டால் அவர்களின் கதி அவ்வளவு தான். உயிரற்ற உடலை மீட்க குறைந்த பட்சம்  ஒரு வாரத்திற்கும் மேல் ஆகி விடும். அதற்குள் உடல் கடுமையாக சிதைந்து விடும். அழுகி போய்விடும். அதனை பார்க்கும்போது அவர்களின் உறவினர்கள் மிகவும் கடும் மன அழுத்தத்தில் சிக்கி விடுகின்றனர். பொதுப்பணித்துறையோ, வனத்துறையோ, போலீசாரோ 24 மணி நேரமும் ஆறு, குளங்கள், கண்மாய்கள் அருவிகளில் யாரையும் இறங்கி குளிக்க விடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியாது. இந்த அபாயங்களை மக்கள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பை பார்த்தாவது ஆறுகளில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News