சோதனைசாவடியில் பாரபட்சமான நடவடிக்கை: தேனியை சுற்றுலா பயணிகள் தவிர்க்கும் அவலம்

தேனி மாவட்ட சோதனை சாவடிகளை கடந்து செல்லும் மணல் கடத்தல் லாரிகள், மருத்துவக் கழிவுஏற்றிச் செல்லும் லாரிகளை கண்டு கொள்வதில்லை

Update: 2023-11-25 10:00 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் கேரள- தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் காட்டும் பாரபட்ச நடவடிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டத்திற்குள் வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் சுற்றுலா வர்த்தகம் கடும் பாதிப்பினை சந்தித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட அற்புதமான சுற்றுலா தளங்கள் உள்ளன. தவிர மிகப்பெரிய ஆன்மீக தலங்களும் உள்ளன. இதனால் கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் வழியாக பிற மாநிலங்களுக்கு செல்பவர்களும், பிற மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களும் மாவட்டத்தில் இரண்டு நாட்களாவது தங்கி சுற்றிப்பார்ப்பது வழக்கம். இதனால் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் செழிப்பாக இருந்தது. குமுளி, கம்பம் மெட்டு, குறிப்பாக போடி மெட்டு சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் காட்டும் பாரபட்சமான நடவடிக்கையால் சுற்றுலா பயணிகள் மிரண்டு போய் தேனி மாவட்டத்திற்கு வருவதையே தவிர்க்கின்றனர்.

சுற்றுலா வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கையினை விட ஓரிரு பயணிகள் அதிகமாக இருந்தாலும், ஒவ்வொரு கூடுதல் பயணிக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கின்றனர். இது கூட அரசால் அனுமதிக்கப்பட்ட விஷயம் தான் இதில் தவறு இல்லை. தவிர கூடுதல் பயணிகளை ஏற்றி வரும் வாகனத்தின் நம்பரை குறித்து வைத்து டிரைவரை மிரட்டி தனியே பணம் பறித்து விடுகின்றனர். குமுளி, கம்பம் மெட்டு சோதனை சாவடிகளில் இந்த பிரச்னை இருந்தாலும் குறிப்பாக போடி முந்தல் சோதனை சாவடியில் இந்த வேலை மட்டும் தான் நடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளை ஏற்றி வரும் வாகன டிரைவர்கள் தேனி மாவட்டத்தை தவிர்க்குமாறு தங்கள் வாகனங்களுக்கு வரும் பயணிகளை அறிவுறுத்தி மாற்றுப்பாதையில் கேரளா அழைத்துச் சென்று விடுகின்றனர்.

சுற்றுலா பயணிகளிடம் இவ்வளவு ரூல்ஸ் பார்க்கும் போலீசார், கேரளாவில் இருந்து முறைகேடாக மருத்துவக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தேனி மாவட்டத்திற்குள் கொட்ட வரும் லாரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். வாரந்தோறும் பல லாரிகளில் கேரள மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து ஏதாவது ஒரு இடத்தில் கொட்டி மாவட்டத்தின் சுகாதாரத்தை நாசப்படுத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளில் டயர் தேய்ந்தும், பிரேக் கட்டுப்பாடு இல்லாமலும், வாகனம் பராமரிப்பு இல்லாமலும் இருக்கும். இதில் ஒரு ஜீப்பில் எட்டு பேரை மட்டும் ஏற்ற வேண்டும். ஆனால் கேரள ஜீப்புகளில் 20 பேர் வரை ஏற்றிக் கொண்டு இவ்வளவு மோசமான வாகனங்களில் அதிக வேகமாக செல்கின்றனர். இதனால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்னர் கூட நடந்த விபத்தில் ஏழு பேர் வரை பலியாகினர். அப்படி இருந்தும் இந்த ஜீப் ஓட்டுநர்கள் மாத மாமூல் தருவதால், கண்டுகொள்வதில்லை.

அதேபோல் தமிழகத்தில் இருந்து விதிகளை மீறி அனுமதியின்றி மணல், ஜல்லிகளை கேரளாவிற்கு கொண்டு செல்லும் லாரிகளையும் கண்டுகொள்வதில்லை. இதற்கும் இவர்கள் கொடுக்கும் மாமூல் தான் காரணம். வழக்கு போட வேண்டும் என்பதற்காக சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் போலீசார் ரூல்ஸ் காட்டி நெருக்கடி கொடுப்பதால் மாவட்டத்தின் சுற்றுலா வர்த்தகம் கடும் பாதிப்பில் உள்ளதாக வர்த்தகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக புகார் மனுக்களும் முதல்வரின் தனிப்பிரிவு வரை அனுப்பி வைத்துள்ளனர். தேனி மாவட்ட எஸ்.பி., இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News