தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அத்தனை அணைகளும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்;
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்து வரும் பலத்த மழையால் தேனி மாவட்டத்தில் அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. உத்தமபாளையம், கம்பம், கூடலுார், லோயர்கேம்ப், குமுளி பகுதிகளில் தினமும் 4 மணி நேரமும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் தினமும் 3 மணி நேரமும் மழை பெய்து வருகிறது. இரவில் மிகவும் குளிர்ச்சியான பருவநிலை நிலவி வருகிறது.
இதனால் அத்தனை கண்மாய்களும், அணைகளும் நிரம்பி வழிகின்றன. ரூல்கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 138.50 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கேரளா வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் வழியாக விநாடிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 2306 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
வைகை அணை நீர் மட்டம் 67 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3553 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 569 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.67 அடியாகவும், சண்முகாநதி அணை நீர் மட்டம் 52.50 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி, சின்னசுருளி அருவி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.