காய்ச்சல் பரவலை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிங்க..

தேனி மாவட்டத்தில் காய்ச்சல் பரவி வருகிறது. குடிநீரை நன்றாக காய்ச்சி குடிப்பது மட்டுமே இதற்கு தீர்வு என அறிவுறுத்தினர்

Update: 2023-12-17 09:30 GMT

பைல் படம்

தேனியில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது அம்மச்சியாபுரம் கிராமம். ஆனால் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி சுகாதாரத்துறையை பொறுத்தவரை இந்த கிராமம் மிகவும் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் சுகாதார ஆய்வாளர்களோ, மேற்பார்வையாளர்களோ அடிக்கடி கிராமத்திற்கு வந்து சுகாதார பணிகளை கவனிப்பதில்லை.

சில நாட்களாக இந்த கிராமத்தில் காய்ச்சல் பரவி வந்தது. தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. சுகாதாரத்துறை விரைவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இதன் விளைவு தற்போது அதிக எண்ணிக்கையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் சிலரது ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது, சாதாரண வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளது கண்டறிப் பட்டுள்ளது. இவர்களுக்கு சாதாரண சிகிச்சை போதுமானது. இருப்பினும் சுகாதாரத்துறை தனது கண்காணிப்பு பணிகளை முறையாக செய்திருந்தால் பொதுமக்களுக்கு இந்த சங்கடம் ஏற்பட்டிருக்காது என கிராம மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்..

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், கண்மாய்கள் உட்பட்ட அத்தனை நீர் நிலைகளிலும் கழிவுநீர் கலந்துள்ளது. இந்த நீரை உள்ளாட்சிகள் நுாறு சதவீதம் சுத்திகரிப்பு செய்து விநியோகிப்பது சாத்தியமில்லாத விஷயம். இதனால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என நாங்கள் பல நாட்களாகவே அறிவுறுத்தி வருகிறோம். குடிநீரை காய்ச்சி குடித்தால் இது போன்ற பல்வேறு பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்’ என்றனர்.

Tags:    

Similar News