விபத்தில் சிக்கிய நபரை மீட்டு சிகிச்சைக்கு உதவிய தேனி கலெக்டர்
அனுமந்தன்பட்டியில் விபத்தில் சிக்கிய நபரை கலெக்டர் முரளீதரன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உதவினார்.;
அனுமந்தன்பட்டி அருகே விபத்தில் சிக்கி காயமடைந்து கிடந்த நபரை மீட்ட தேனி கலெக்டர் முரளீதரன்.
தான் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி கால்கள் கடும் சேதமடைந்த நிலையில் சாலையாேரத்தில் கிடந்த நபரை ஆட்டோவில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கலெக்டர் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்தார்.
தேனி கலெக்டர் முரளீதரன் இன்று காலை குமுளி, கம்பம் மெட்டு சோதனை சாவடிகளில் சோதனை முடிந்து காரில் உத்தமபாளையம் வந்து கொண்டிருந்தார். அனுமந்தன்பட்டி அருகே கலெக்டர் கார் வந்த போது, சாலையாேரம் டூ வீலர் விபத்தில் சிக்கி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், 35 என்ற நபர் கால்கள் இரண்டும் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்தார். கலெக்டர் காரை நிறுத்தி, இறங்கிச் சென்று பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை எப்போது கிடைக்கும் என்பது உறுதியில்லை. வரும் நோயாளிகளை உடனடியாக கவனிப்பார்களா? டாக்டர்கள் இருப்பார்களா இல்லையா என்பதும் தெரியாது. சிகிச்சை தரம் போன்ற விவரங்களை கலெக்டர் முரளீதரன் நன்கு அறிந்துள்ளார். எனவே காயம்பட்டவருடன் நேரில் கலெக்டரும் அரசு மருத்துவமனைக்கு சென்றார். கலெக்டர் வந்ததை அறிந்ததும் டாக்டர்களும், ஊழியர்களும் பரபரத்தனர். கலெக்டர் அழைத்து வந்த நபருக்கு ராஜஉபச்சாரத்துடன் சிகிச்சை கிடைத்தது.
அங்கு சிறிது நேரம் இருந்து மருத்துவமனையை சுற்றிப்பார்த்த கலெக்டர் காயமடைந்த நபருக்கு ஆறுதல் கூறி, சில உதவிகளையும் செய்து விட்டு வெளியேறினார்.