பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து உலக சாதனை படைத்த தேனி சிறுவன்
பாக் ஜலந்தியில் 30 கி.மீ., துாரத்தை தனது 10 வயதில் 10.30 மணி நேரத்தில் கடந்து தேனி சிறுவன் ஜெய்ஜஸ்வந்த் சாதனை படைத்துள்ளார்.;
தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ரவிக்குமார்- தாரணியின் மகன் ஜெய்ஜஸ்வந்த், 12. இவர் தனது ஆறு வயதில் தேனி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியை தொடங்கினார். தனது 8 வயதில் 4 கி.மீ., துாரத்தை 80 நிமிடத்தில் இடைவிடாமல் நீந்தி தனது முதல் உலக சாதனையை படைத்தார். கர்நாடகாவில் நடந்த 'ஓப்பன் வாட்டர் ஸ்விம்மிங் சேம்பியன்ஷிப்' போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றார்.
பிரபல நீச்சல்வீரர் குற்றாலீஸ்வரன் தனது 12வது வயதில் பாக்., ஜலசந்தியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். ஜெய்ஜஸ்வந்த் இலங்கை தலைமன்னார் முதல் இந்தியாவின் ராமேஷ்வரம் அரிச்சல்முனை வரை 30 கி.மீ., கடல் துாரத்தை தனது 10 வயதில் 10 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்தார். இந்த உலக சாதனையை தற்போது வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
இந்த சாதனையை படைக்க ஜெய்ஜஸ்வந்த் சென்னை கோவலம் கடற்கரை, ராமேஷ்வரம், தனுஷ்கோடி கடற்கரைகளில் கடும் பயிற்சி எடுத்தார். கடந்த 2020ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த 3வது 'ஓப்பன் வாட்டர் ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப்' போட்டியிலும் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றார்.
இந்த சாதனைகள் பற்றி ஜெய்ஜஸ்வந்த் கூறியதாவது: உலகில் உள்ள 'ஓசன் செவன்' என்று சொல்லப்படும் அத்தனை நீர்நிலைகளையும் நீந்தி கடப்பதே எனது லட்சியம். இந்த சாதனை படைத்த கையோடு இந்திய பாதுகாப்புத்துறையில் பணிபுரிய வேண்டும் என்பது எனது லட்சியம். தற்போது என் சாதனையினை பார்த்து மேலும் பலரும் நீச்சல் களத்தில் இறங்கி உள்ளனர். எனது சாதனையினை முறியடிக்க அவர்கள் விருப்பம் காட்டுகின்றனர். அதற்காக தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
என்னை இலக்காக வைத்து என் சாதனையை முறியடிக்க பலர் களம் இறங்கி உள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு எனது தொழில்நுட்பங்களை கற்றுத்தந்து நீச்சல் போட்டியில் அவர்களும் சாதனை படைக்க தேவையான உதவிகள் செய்ய நான் தயாராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியனும் உலகில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும். உலகின் பிற நாட்டு சாதனையாளர்கள் எல்லாம், நம் இந்தியவர்கள் வைத்த டார்க்கெட்டை உடைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.