தேனி: கரும்பு பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள்
கரும்பு பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேனி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்.;
கரும்பு பயிரை காப்பீடு செய்வதற்கு விவசாயிகளுக்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தேனி வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்பீட்டை தவிர்க்கவும், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச வருவாயினை உறுதிப்படுத்தவும் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்கோ- டோக்கியோ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் ராபி பருவத்தில் 12 குறு வட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு 2600 ரூபாய் செலுத்தினால் போதும். பொதுசேவை மையங்கள் மூலமோ, தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலமோ, பதிவு செய்யலாம். விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், காப்பீட்டு தொகை செலுத்திய ரசீது ஆகியவற்றை இணைத்து பதிவு செய்ய வேண்டும். காப்பீடு தொகை செலுத்திய ரசீதினை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வரும் ஆகஸ்ட் முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் பயிர்காப்பீட்டினை பதிவு செய்து கொள்ளலாம். கடந்த 2019- 2020ம் ஆண்டு 187 விவசாயிகளுக்கு 41 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.