தேனி 27 வது வார்டு திமுக வேட்பாளராக களம் இறங்கிய அய்யனார்பிரபு
தேனி 27வது வார்டு திமுக வேட்பாளராக அய்யனார்பிரபு இரண்டாவது முறையாக உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்கி உள்ளார்
தேனி நகராட்சி 27வது வார்டு திமுக வேட்பாளராக இரண்டாம் முறையாக பி.அய்யனார்பிரபு களம் இறங்கி உள்ளார்.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 27வது வார்டில் கடந்த முறை திமுக கவுன்சிலராக வென்றவர் அய்யனார்பிரபு(40). இப்போது இரண்டாம் முறையாக களம் அதே வார்டில் தி.மு.க., வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்கி உள்ளார். அய்யனார்பிரபு கூறியதாவது: நான் கடந்த முறை தி.மு.க., கவுன்சிலராக இருந்த போது எனது வார்டினை வளர்ச்சிப்பணிகள் அதிகம் கொண்ட வார்டாக மாற்றினேன்.
அப்போது தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தான் குடிநீர் சப்ளை இருக்கும். குடிநீர் திறக்கப்படும் போது, நான் வீடு, வீடாக சென்று கதவை தட்டி, தண்ணீ்ர் சப்ளை தொடங்கி உள்ளது. குடிநீர் பிடித்துக் கொள்ளுங்கள் என மக்களை எழுப்பி விடுவேன். இரவெல்லாம் கண்விழித்து குடிநீர் சப்ளை செய்வேன்.அதேபோல் மருத்துவ சேவைக்காக எந்த நேரமும் மக்கள் என்னை எழுப்புவார்கள். எனது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற்றுத்தந்துள்ளேன். 30 பேருக்கு வீடு கட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாங்கித்தந்துள்ளேன். 150க்கும் மேற்பட்டோருக்கு திருமண உதவித்தொகை வாங்கித் தந்துள்ளேன்.
எனது கவுன்சில் பதவி முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் நான் தொடர்ந்து கவுன்சிலர் போன்றே பணிபுரிந்து வருகிறேன். எனது சொந்த செலவில் சிறிய மீட்டிங்ஹால் கட்டி உள்ளேன். கடந்த ஆறு வருடங்களாக மக்களுக்கு இங்கு இலவசமாக விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி வருகிறேன்.
கவுன்சிலர் என்பது எனக்கு வழங்கப்பட்ட ஒரு பொறுப்பு தான். ஆனால் என் குடும்பத்தில் உள்ள 10 பேருமே இந்த சேவையினை செய்கின்றனர். இந்த வார்டில் பெரும்பாலும் எனது சொந்தங்கள். நான் இவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நகராட்சி கவுன்சிலர் என்ற முறையில் எனது சேவை செய்ய சற்று எளிதான வழி கிடைக்கும். அதனால் தான் கவுன்சிலர் பதவிக்கு தேர்தலில் நிற்கிறேன். எனக்கு தி.மு.க., மேலிடம் இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கி உள்ளது. இம்முறையும் வெற்றி எனக்கு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு கூறினார்.