விவசாயிகளை பாதுகாத்த மணிப்பூரின் மாணிக்கம்..!

The youth has saved thousands of farmers who were living in

Update: 2022-07-03 09:00 GMT

 மணிப்பூர் இளைஞர்  ராகேஷ் கெய்ஷாம்

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் ஒன்று. இதன் தலைநகரம் இம்பால். மணிப்பூரின் வடக்கில் நாகாலாந்தும், தெற்கில் மிஸோராமும், மேற்கில் அஸ்ஸாமும் உள்ளன. கிழக்கில் இருப்பது மியன்மர் (பர்மா). 8621 சதுர மைல்கள் பரப்புள்ள மணிப்பூரின் ஜனத்தொகை 30 லட்சம் தான். பாஜக ஆளும் இம்மாநிலத்தின் முதல்வராக என். பிரேன் சிங் என்பவர் இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் சீதோஷ்ண நிலை கொண்ட மணிப்பூரில், கொஞ்ச காலம் முன்பு வரை, விவசாயிகள், வியாபாரிகளின் பிடிகளில் சிக்கி, கஞ்சா, அபினி (பாப்பி) போன்ற போதைப் பொருள்களைப் பயிரிட்டு வந்தனர். கஞ்சாவும், அபினும் மியான்மருக்கும், நேபாளத்துக்கும் கடத்தப் பட்டு வந்தன. இதனைப் பயிரிட விவசாயிகள் , வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கி விடுவார்கள். இந்த விவசாயத்தில் ஓரளவு லாபம் இருந்தாலும், அவ்வப்போது, அரசின் போதைப்பொருள் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு, விளைந்துள்ள கஞ்சாவையும், பாப்பியையும் கொளுத்தி விட்டுப் போய் விடுவார்கள்.

அப்போது வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய கஞ்சாவும், அபினியும் இருக்காது; வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்; நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டும்..!எனவே எப்போதுமே மணிப்பூர் விவசாயிகள் வீடுகளில் வறுமை தான்..தாண்டவம் ஆடியது! இதனால், பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; வீட்டை விட்டு ஓடிப் போய் உள்ளனர்; குடிகாரர்களாக மாறி உள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், மணிப்பூரின் தலை நகரான இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெய்னகாங்க் (Leinakhong ) கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வைத்துக் கொண்டு வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் இருந்தவர் தான் 34 வயது இளைஞர், " ராகேஷ் கெய்ஷாம் ( Ragesh Keisham ).

இவர் அது வரை, எங்கெங்கோ அலைந்து, என்னென்னவோ தொழில்கள் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இறுதியில், தன் நிலத்தில் விவசாயம் செய்வது என்னும் முடிவில், கிராமத்துக்கு வந்து விட்டார். அப்போது அவருக்கு, நறுமண விஞ்ஞானியான (Aromatic Scientist ) டாக்டர் எம். அஹமத் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.

அவர், பிரேசில் நாட்டில், மருந்தாகப் பயன்படும் "ஜுரப் புல் (Fever Grass )" என்னும் பெயரைக் கொண்ட "லெமன்கிராஸ் ( Lemongrass) " விவசாயத்தைப் பற்றி ராகேஷிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார். சுமார் 1 ½ ஆண்டுகள், "லெமன்கிராஸ்" பயிரிடுவதைப் பற்றியும், அதனை டீ இலையுடன் சேர்ந்து, மணம் மிக்க, உடல் நலனைப் பாதுகாக்கும், கலவை ஒன்றைத் தயார் செய்யவும், ராகேஷ் கற்றுக் கொண்டார்.

இதற்காக அவர் இம்பாலுக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்தார். முதலில் கொஞ்சமாக லெமன்கிராஸையும், தேயிலையையும் பயிரிட்டு, தன் பெற்றோர்களுக்குக் கொடுத்து, அவர்களது அபிப்பிராயத்தைப் பெற்றார். தன் கலவையில் தேக நலனைப் பாதிக்கும் விஷப்பொருள் ஏதும் இல்லை என, டில்லியில் உள்ள "எஃப் ஐ சி சி ஐ ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்திடம் (FICCI Research & Analysis Centre, Delhi ) அத்தாட்சி பெற்றார். இந்தோனேஷியாவில் இருந்து 10000 லெமன்கிராஸ் பயிரை வாங்கி வந்து, தன் நிலத்தில் நட்டார்.

காலங்கள் உருண்டோடியது ..! ராகேஷ் நிலத்தில் இருந்து பயிரான லெமன் கிராஸ் பயிரையும், தேயிலையையும் கலந்து, நறுமண டீயைத் தயார் செய்து, முதலில் 200 பாக்கெட்டுகளில், 21-11-2011 ல், விற்பனையை இம்பாலில் தொடங்கினார். இவரது கலவையை அழகான பொட்டலங்களில் விற்க, அவர் மனைவி தன் நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார். ஐந்தே நிமிஷங்களில் 200 பொட்டலங்களும் விற்றுத் தீர்ந்தன.

பிறகு என்ன..? கஞ்சா, அபினி பயிர் செய்து கொண்டிருந்த அக்கம் பக்கத்து நிலக்காரர்கள், இவரிடம் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடத் தொடங்கினார்கள். அவர்களது உழைப்பையும் ராகேஷ் பயன் படுத்திக் கொண்டார். "ஸூயிஜெனரஸ் அக்ரானமி ப்ரைவேட் லிமிட்டெட் (Suigeneris Agronomy Private Limited ) " என்னும் நிறுவனத்தை அமைத்து, அதில் நில சொந்தக்காரர்களை இணைத்து, இப்போது 350 ஏக்கர்களில், லெமன்கிராஸ்-தேயிலை பயிரிடுகிறார்.

இவரது இப்போதைய ஆண்டு வருமானம் 8 கோடி ரூபாய்..! ராகேஷ் இப்போது மணிப்பூரின் விவசாயிகளுக்கு லெமன் கிராஸ் டீ செய்வது பற்றி பயிற்சி கொடுத்து வருகிறார். அவருக்கு, அம்மாநில அரசு துணை நிற்கிறது. வங்கிகள் கியூ வரிசையில் வந்து நின்று, 'எத்தனை ரூபாய் கடன் வேண்டும்..?" எனக் கேட்கிறார்கள்..! 

ராகேஷ் மணிப்பூரின் மாணிக்கம் அல்லர்! மனித குல மாணிக்கம்! போதைப் பொருள் உற்பத்தியை அடியோடு நிறுத்தி, விவசாயிகளின் தற்கொலை வறுமையை ஓழித்து, குடிப்பழக்கதில் இருந்து மக்களைக் காப்பாற்றி, மணிப்பூர் மாநில விவசாயிகளின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துள்ள ராகேஷ் மணிப்பூர் மாணிக்கம் என்றால் மிகையில்லை. 

Tags:    

Similar News