அனைத்து காய்கறிகளும் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தேனி மாவட்டத்தில் அனைத்து வகையான காய்கறிகளின் விலைகளும் குறைந்துள்ளன;
தேனி மார்க்கெட்டில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் அனைத்து காய்கறிகளும் கிலோவிற்கு 50 ரூபாய் வரை விலை குறைந்துள்ளன.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்ததால் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்து. அதனால் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக, விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. ஆனால் நீர் வளம் நல்ல முறையில் உள்ளது.
இதனால் மீண்டும் காய்கறிகளின் விளைச்சல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. வரத்து ஓரளவு திருப்திகரமான நிலையை எட்டியதால், விலைகள் குறைந்துள்ளன. கிலோ 100 ரூபாய் விற்ற கத்தரிக்காய் இன்று 40 ரூபாய் ஆக குறைந்துள்ளது. கிலோ 140 வரை சென்று மக்களை திக்கு முக்காட வைத்த தக்காளி தற்போது கிலோ 60 ரூபாய்க்கு இறங்கி வந்துள்ளது.
கிலோ 100 ரூபாய் வரை விற்ற வெண்டைக்காய் இன்று கிலோ 60 ரூபாய்க்கு இறங்கியது. அதேபோல் கொத்தவரங்காய் கிலோ 40 ரூபாய், சுரைக்காய் 25 ரூபாய், புடலங்காய் 30 ரூபாய், பாகற்காய் 60 ரூபாய், பீர்க்கங்காய் 45 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய், பூசணிக்காய் 30 ரூபாய், அவரைக்காய் 45 ரூபாய், தேங்காய் 30 ரூபாய், சின்னவெங்காயம் 65 ரூபாய், பெல்லாரி 45 ரூபாய், நுார்க்கல் 55 ரூபாய், முள்ளங்கி 30 ரூபாய், முருங்கை பீன்ஸ் 65 ரூபாய், பட்டர்பீன்ஸ் 150 ரூபாய் (கடந்த வாரம் வரை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையானது). முட்டைக்கோஸ் 65 ரூபாய், கேரட் 45 ரூபாய், டர்னிப் 45 ரூபாய், சவ்சவ் 25 ரூபாய், காலிபிளவர் 30 ரூபாய், பச்சைபட்டாணி 65 ரூபாய் என அனைத்து காய்கறிகளின் விலைகளும் சற்று இறங்கு முகத்தில் உள்ளன என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.