போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட தேனி அல்லிநகரம்

தேனி அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி பொதுமக்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.;

Update: 2023-11-26 15:45 GMT

பைல்

தேனி அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி பொதுமக்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். அல்லிநகரம், பொம்மைகவுண்டன்பட்டி பகுதிகள் தான் இன்றைய தேனியின் தாய் கிராமாக இருந்து வருகிறது. கம்பம், மதுரை, பெரியகுளம் ரோடுகள் சந்திக்கும் இடத்தில் உருவான புதிய குடியிருப்பே தேனி. இரண்டும் இணைக்கப்பட்டு தேனி-அல்லிநகரம் நகராட்சி என பெயர் மாற்றப்பட்டது.

தேனியில் இருந்து பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல் வழியாக வடமாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் செல்லும் அத்தனை வாகனங்களும் அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டியில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றன. புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்ததும், அத்தனை பஸ்களும் பைபாஸ் ரோடு வழியாக புதிய பஸ்ஸ்டாண்டிற்கு வந்து விடுகிறது.

அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி வழியாக பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரிரு டவுன்பஸ்கள் மட்டும் எப்போதாவது ஒருமுறை அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி வழியாக பெரியகுளம் செல்கிறது. மற்றபடி இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றால் இரண்டு பஸ் மாறி புதிய பஸ்ஸ்டாண்ட் வர வேண்டும். அல்லது தனியார் வாகனங்கள் மூலம் அன்னஞ்சி விலக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏற வேண்டும்.

அன்னஞ்சி விலக்கில் ஏறும் போது பஸ்சில் இடமில்லாவிட்டால் நின்று கொண்டே பயணிக்க வேண்டும். எனவே இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல எக்காரணம் கொண்டும் இரண்டுமுறை பஸ்மாறி புதிய பஸ்ஸ்டாண்ட் வர வேண்டும். இதற்கே குறைந்தது 45 நிமிடம் ஆகி விடும். அவசர வேலையாக செல்ல ஆட்டோ பிடித்தால் 150 ரூபாய் கட்டணம் கட்டுவதை தவிர வேறு வழியில்லை. பஸ் ஏறும் முன்பே 150 ரூபாய் செலவிடுவது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வசிக்கும் மக்களுக்கும் சாதாரண விஷயம் இல்லை.

பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம் பகுதிகளை புதிய பஸ் ஸ்டாண்ட்டுடன் இணைக்கும் வகையில் கே.ஆர்.ஆர்., நகர், சிவாஜிநகர் வழியாக பஸ் விட வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களிடம் இருந்த போக்குவரத்து வசதிகளை இழந்து தவிக்கின்றனர். அதுவும் நள்ளிரவில் இப்பகுதியை சேர்ந்த யாராவது வெளியூர் சென்று வீடு திரும்பினால் அந்த குடும்ப உறுப்பினர் யாராவது விழித்திருந்து டூ வீலரிலோ அல்லது ஆட்டோவில் 200 ரூபாய் (இரவில் வாடகை அதிகம்) கொடுத்தோ சென்று அழைத்து வர வேண்டும்.

இரவில் தனியாக ஆட்டோவில் பெண்களை அழைத்து வருவதற்கும் இப்பகுதி மக்கள் தயக்கம் காட்டுவதால், குடும்ப உறுப்பினர்களின் உதவிகளை நாடுகின்றனர். தேனியில் 90 சதவீதம் ஆட்டோ டிரைவர்கள் நேர்மையானவர்கள் என்றாலும் இரவு நேர பயணத்திற்கு பெண்களிடம் அச்சஉணர்வு காணப்படுவதால் அந்த குடும்பமே விழித்திருக்கும் நிலை தான் இன்னமும் உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பைபாஸ் வழியாக அன்னஞ்சி செல்லும் பஸ்களை பழைய முறைப்படி பழைய பஸ்ஸ்டாண்ட் வந்து அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி பகுதிகளை இணைத்து அன்னஞ்சி வழியாக பெரியகுளம் செல்லும் வகையில் போக்குவரத்தினை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News