அதிமுகவில் வெடித்தது அடுத்த குண்டு: என்னை நீக்க இவர்கள் யார்? ராஜா ஆவேசம்

அதிமுகவில் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்.க்கு முன்னரே நான் கட்சிக்கு வந்தவன். என்னை நீக்க இவர்கள் யார்? என ஓபிஎஸ் தம்பி ராஜா ஆவேசம்.

Update: 2022-03-05 11:50 GMT

ஓ.பி.எஸ்., தம்பி ராஜா.


தேனி மாவட்ட அ.தி.மு.க.,வில் தினமும் ஒரு குழப்பம் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என ஓ.பி.எஸ்., தலைமையில் தீர்மானம் போடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே முன்னாள் அமைச்சர்கள் உதயக்குமார், செல்லுார் ராஜூ உட்பட சிலர் ஓ.பி.எஸ்.ஐ., வந்து பார்த்தனர்.

இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ்., தம்பி ராஜா, தேனி நகராட்சி முன்னாள் தலைவர் முருகேசன் உட்பட சிலர் திருச்செந்துாரில் சசிகலாவை பார்த்தனர். இன்று காலை சசிகலாவை பார்த்த அத்தனை பேரையும் கட்சியை விட்டு நீக்கியதாக ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இணைந்து அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே முன்னாள் அமைச்சர்கள் குழு வந்து ஓ.பி.எஸ்.ஐ., சந்தித்தது. அவர்கள் வந்து சென்ற சில நிமிடங்களில் ஓ.பி.எஸ்., தம்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் ஏற்பட்டு வரும் தொடர் தோல்விகளுக்கு ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவருமே காரணம். இதனால் கட்சியை மீட்டெடுக்க மீண்டும் சசிகலா என்ற ஒற்றை தலைமையில் கட்சி வர வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். இதற்காக அ.தி.மு.க.,விற்கு தலைமை தாங்க வேண்டும் என வலியுறுத்தவே சசிகலாவை சந்தித்தோம். எங்கள் கருத்தையும், தொண்டர்கள் கருத்தையும் அவரிடம் தெரிவித்தோம். அவரும் கேட்டுக் கொண்டார். அவர் தான் தற்போதும் அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளர். நான் ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்.,க்கு முன்பே கட்சிக்கு வந்தவன். என்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே உண்டு. ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்., யார் என்னை நீக்குவதற்கு? இவர்கள் நீக்கியது செல்லாது. இவ்வாறு கூறினார்.

சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த தேனி மாவட்ட செயலாளர் சையதுகானையும், முன்னாள் எம்.பி., பார்த்திபனையும் நீக்கவில்லையே? உங்களை மட்டும் நீக்கி உள்ளார்களே? என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ராஜா, 'இவர்களுக்கு அதிகாரமே இல்லை என்று சொல்கிறேன். நீங்கள் நீக்கி விட்டனர் என்கிறனர்' என கோபப்பட்டார்.

Tags:    

Similar News