கேரள குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை : தேனி எஸ்.பி., தலையிட்டதால் பிரச்னைக்கு தீர்வு
கேரளாவில் தமிழக தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தேனி எஸ்.பி., தலையிட்டதால், பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் இருந்து கேரள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்கள் மற்றும் அந்த பெண்கள் ஏறி வந்த கார் ஓட்டிய டிரைவர்கள் மீது கேரள குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்களை அநாகரீகமாக நடத்தி உளவியல் சித்ரவதை செய்தனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கம்பம் மெட்டு கேரள போலீசார் இந்த குண்டர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விட்டு, அவர்களை ஸ்டேஷன் ஜாமீனில் விட்டனர். இதனை அறிந்த பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கம்பம் மெட்டு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிடப் போவதாக அறிவித்தது.
இதனை தொடர்ந்த தமிழக உளவுத்துறையும், கேரள உளவுத்துறையும் இணைந்து களம் இறங்கியது. சம்பவம் குறித்து தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி விசாரணை நடத்தினார். உடனே இந்த தகவல்களை இடுக்கி எஸ்.பி., குரியாகோஸ் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இரண்டு எஸ்.பி.,க்களும் தலையிட்டதன் அடிப்படையில் அந்த குண்டர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பின்னர் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அமைதியாகினர்.
இது குறித்து இச்சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் பல ஆயிரம் பெண்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் டி.எஸ்.பி., குமாரி, கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா ஆகியோர் நேரடியாக கள விசாரணை செய்து, இந்த விஷயத்தை கேரள போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
பிரச்னையின் தீவிரத்தை கேரள போலீசாருக்கு புரிய வைத்தனர். இதனை தொடர்ந்து கேரள உளவுத்துறையும் கேரள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உரிய உண்மைத்தகவல்களை வழங்கினர். இதன் அடிப்படையில் இந்த குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முயற்சித்த தேனி எஸ்.பி., மற்றும் அவர் தலைமையிலான போலீசாருக்கும், கேரள உளவுத்துறைக்கும், இடுக்கி எஸ்.பி.,க்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
கேரளாவில் பல பிரச்னைகள் உள்ளன. அங்கு தமிழக பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை. நாங்கள் ஒன்றும் இன, மொழி வெறியர்கள் அல்ல. எங்கள் கேரள சகோதரர்களுடன் நாங்கள் ஏன் மோதல் போக்கினை கையாள வேண்டும். நாங்கள் எப்போதும் இணக்கமாகவே இருக்க விரும்புகிறோம். இவ்வாறு கூறினார்.