வனத்துறையின் அராஜகபோக்கு! பத்திரிக்கையாளர்கள் கொந்தளிப்பு!
சோத்துப்பாறை அணை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி அடாவடி செய்த வனக்காவலர்.
செய்தியாளர் சென்ற இருசக்கர வாகன சாவியை பிடுங்கி வைத்து அராஜகத்தில் ஈடுபட்ட வனக்காப்பாளர். தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கொந்தளிப்பு. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள சோத்துப் பாறை அணை பகுதியில் அணையின் தன்மை மற்றும் நீர் இருப்பு விபரங்களை செய்தியாக சேகரிக்க சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி,செய்தியாளரை தடுத்து நிறுத்தி, ஒருமையில் பேசி அவர் சென்ற இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி அடாவடியில் வனக்காவலர் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவ்வழியாக அகமலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மலைக்கிராம மக்களிடம் பணம் கொடுத்தால் தான் உள்ளே அனுமதி எனக்கூறி வனத்துறையினர் அப்பாவி மலைகிராம மக்களிடமும், ஜீப் ஓட்டுநர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் அடாவடி வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை 100 நாட்களுக்கு மேலாக நிரம்பி வழிகின்ற செய்தியை சேகரிக்க சென்ற பொழுது சோத்துப்பாறை அணை சோதனை சாவடியில் பணியில் இருந்த புவனேஸ் என்ற வனக்காவலரிடம் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் முறையாக வனக்காவலரிடம் செய்தி சேகரிக்க வந்துள்ளேன் என்று கூற யாராக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் உள்ளே அனுமதி என்று கூற, எவ்வளவு பணம் என்று வனக்காவலரிடம் செய்தியாளர் கேட்க, உங்களால் முடிந்ததைக் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று வனக்காவலர் கூறியுள்ளார். பணம் தர செய்தியாளர் மறுத்துள்ளதால் செய்தியாளரை வனக்காவலர் புவனேஸ் ஒருமையில் பேசியுள்ளார். பின்னர் வனத்துறை அலுவலர்களிடம் தொலைபேசியில் பேசிவிட்டு அங்கிருந்து உத்தரவு கிடைக்க வாகனத்தின் சாவியை கொடுத்துள்ளார். இவரின் பணம் பறிக்கும் செயலுக்கு அதிகாரிகளும் உடந்தையா ? என்று எண்ணத்தோன்றுகின்றது. சோத்துப்பாறை அணைப்பகுதியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடமும் அரசு அனுமதியின்றி அடாவடி வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு செய்தியாளரிடம், செய்தி சேகரிக்க செல்வதற்கு பணம் கேட்டு வனத்துறையினர் மிரட்டுகிறார்கள் என்றால் மலை கிராம மக்கள் அவர்களின் இல்லங்களுக்கு செல்வதற்கே பணம் கொடுத்தால் தான் செல்ல முடியும் என்பதற்கு இவை ஒரு சான்றாகும்.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம், வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூலில்(வழிப்பறியில்) ஈடுபட்டு வரும் வணக்காப்பாளர் புவனேஸ் என்பவர் மீது துறை ரீதியாக பணி நீக்க நடவடிக்கை மேற்கொண்டு. அப்பாவி பொதுமக்கள், மலைகிராம மக்களிடம், பணம்பறிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.