தேனியில் அதிகரிக்கும் மாடித்தோட்டங்கள்
தேனியில் மாடித்தோட்டங்கள் அதிகரித்து வருவதால், பூச்செடிகள், பல்வேறு வகையான மரக்கன்றுகள் விற்பனை களைகட்டி வருகிறது.
தோட்டக்கலைத்துறை சார்பில் நகர் பகுதிகளில் மாடித்தோட்டங்கள் அமைக்க இலவசமாக விதைகள் வழங்கப்பட்டன. தேனியில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் வளர்ந்து பலன் கொடுத்து வரும் நிலையில், மேலும் பலர் மாடித்தோட்டங்கள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சிறிய அளவில் வளரும் மரக்கன்றுகள், பூச்செடிகளை அதிகம் மாடிகளில் நடவு செய்து வருகின்றனர். கான்கிரீட் மீது, சிமென்ட் பூசி அதன் மேல் ஒரு அடி உயரத்திற்கு மண் நிரப்பியும் சிலர் தோட்டங்களை அமைத்துள்ளனர். இதனால் பலரும் மரக்கன்றுகள், பூச்செடிகளை விரும்பி வாங்குகின்றனர்.
தேனியில் இருந்து தேவதானப்பட்டி வரையிலும் அதிகளவில் தோட்டக்கலை கன்றுகள், செடிகள் உற்பத்தி செய்யும் தனியார் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்த பண்ணைகளில் இருந்த வாகனங்களில் கன்றுகளை கொண்டு வந்து தேனியில் தெருத்தெருவாக விற்பனை செய்கின்றனர். ஒரு கன்று அதிகபட்சம் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.