பணி மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வில் சில திருத்தங்கள் வேண்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.;
பைல் படம்.
ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வில் சில திருத்தங்கள் வேண்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உத்தரவிட்டுள்ள தங்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் வெளியிட்டுள்ள செயல்முறைகள் கடிதத்தில் சில திருத்தங்களை செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்பு வந்த நேரத்திலேயே கல்வித்துறையின் சார்பில் மேல்முறையீடு செய்து பணி புரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வகையில் உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை தங்களிடம் நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் தாங்கள் வெளியிட்டுள்ள உத்தரவின் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.
நீதிமன்ற தீர்ப்பில் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்கில் உரிய தெளிவுரைகள் கிடைத்த பின்னர் பதவி உயர்வு நடத்தலாம் என திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய நிகழ்வுகளில் பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த ஒன்றியத்திலேயே படித்து பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பு வரும் வரையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இடைநிலை ஆசிரியர்கள் தாய் ஒன்றியத்திற்கு மீள திரும்புதல் மற்றும் உபரி ஆசிரியர் பணி நிரவல் ஆகியவை மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மே 22ஆம் தேதி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிய பிறகு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாலும், நிர்வாகம் மாறுதல் என்ற பெயரில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாலும், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் தாய் ஒன்றியத்திற்கு மீள திரும்புவோர் மற்றும் பணி நிரவல் பெறும் ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள். எனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை முடித்ததற்கு பின்னர், இடைநிலை ஆசிரியர் தாய் ஒன்றியத்திற்கு மீள திரும்புதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஆகியவைகளை நடத்த வேண்டும்.
பணி நிரவல் செய்யப்படுபவர்கள் மட்டுமே கூடுதல் தேவை பணியிடங்களில் பணி மாறுதல் பெற அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள, கூடுதல் பணியிடம் தேவைப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதனை தவிர்க்கும் வகையில் பணி மாறுதல் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் கூடுதல் தேவை பணியிடங்களிலும் பணி மாறுதல் பெற அனுமதிக்க வேண்டும்.
கடந்தாண்டு எமிஸ் வலைதளம் மூலம் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. மேம்படுத்தப்படாத தொழில்நுட்பத்தை கொண்டிருக்க கூடிய இந்த எமிஸ் வலைதளத்தால் காலதாமதம் மற்றும் கால விரயம் ஏற்பட்டதை அனைவரும் அறிவோம். அதனால் இந்த ஆண்டு அத்தகைய தவறுகள் நடைபெறாத வகையில் குறித்த நேரத்தில் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.