டீ, காபி, வடை விலை ‘கிடுகிடு’ ஒரு பனியாரம் 8 ரூபாயாம்.....

தேனியில் உணவுப்பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஆனால் யாரும் சம்பளம் உயர்த்தி வழங்கவில்லை.

Update: 2023-04-04 12:00 GMT

பைல் படம்.

தேனி மிக, மிக சிறிய மாவட்டம். தேனி நகராட்சியின் மக்கள் தொகை தற்போதைய தோராய கணக்குப்படி 1.25 லட்சமாக இருக்கும். மாவட்டத்தின் மக்கள் தொகையே 13 லட்சம் தான். தேனி மாவட்டத்தின் மக்கள் தொகை, மதுரை நகரின் மக்கள் தொகையை விட குறைவு. ஆனால் மக்களி்ன் வாழ்க்கை தரமும், செலவும் பல மடங்கு உயர்ந்துள்ளது. செல்வம் கொழிக்கும் மாவட்டமாக தேனி மாவட்டம் திகழ்கிறது. அதே அளவு விலைவாசியும் உயர்ந்துள்ளது. வாழ்க்கை தரம் உயர்ந்தாலும், வாழ்க்கை செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்களும், கீழ்தட்டு மக்களும் திணறி வருகின்றனர்.

இங்கு பெரிய நவீன ஓட்டல்கள் என எதுவும் இல்லை. சாதாரண ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள் தான் உள்ளன. ஆனால் விலைகள் தான் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஏப்., முதல் தேதியில் இருந்து டீ, காபி விலையை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தி விட்டனர். பல கடைகளில் வடை 10 ரூபாய் என்றாகி விட்டது. அதாவது ஒரு வடை, காபி சாப்பிட்டால் 35 ரூபாய் ஆகும். ஆமாம் காபியின் விலை 25 ரூபாயினை எட்டி விட்டது. சில சாதாரண கடைகளில் மட்டும் காபி விலை 18 முதல் 20 ரூபாய் என ஊசலாடுகிறது. சுமாரான கடைகளில் 25 ரூபாய் என நிர்ணயித்து விட்டனர்.

நடுத்தர ஓட்டல்களில் ஒரு பனியாரம் 8 ரூபாய் என விற்கப்படுகிறது. ஐந்து பனியாரம் சேர்ந்து ஒரு இட்லி அளவு இருக்கும். அவ்வளவு தான். சாதாரண மினி, மீல்ஸ் 100 ரூபாய். சாப்பாடு 120 ரூபாய் என விலைகள் விர்ரென உயர்ந்து கொண்டே செல்கிறது. இவ்வளவு விலை உயர்த்தியும் எந்த ஓட்டல், டீக்கடைகள், பேக்கரிகளில் சம்பளத்தை உயர்த்தவில்லை. இந்த விலை உயர்வு பொருட்களின் மூலப்பொருள் விலை உயர்வுக்கே போதுமானதாகி விடுகிறது. சம்பளத்தை உயர்த்தினால் எங்களுக்கு கட்டுபடியாகாது என ஓட்டல் முதலாளிகள் கூறி வருகின்றனர். சில இடங்களில் ஆட்குறைப்பும் செய்கின்றனர். மொத்த பணிச்சுமையும், இருக்கும் தொழிலாளர்கள் தலையில் வந்து விழுகிறது.

இப்படி வேலை நேரத்தையும் கூட்டி, சம்பளத்தையும் உயர்த்த மறுத்தால், வடமாநில இளைஞர்களை வைத்து தான் வேலை பார்க்க வேண்டும் என வடை மாஸ்டர்கள், டீ மாஸ்டர்கள், இட்லி, தோசை மாஸ்டர்கள், புரோட்டா மாஸ்டர்கள் சொந்தமாக தள்ளுவண்டி கடைகள் வைக்க தொடங்கி உள்ளனர். இதனால் தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கையும் தேனியில் அதிகரித்து வருகிறது. தற்போது பெரியகுளம் ரோட்டில் நேரு சிலையில் இருந்து பொம்மையகவுண்டன்பட்டி வரை கணக்கெடுத்தால் வழிநெடுக தள்ளுவண்டி கடைகளை பார்க்க முடியும்.

Tags:    

Similar News